மேலோட்டமாக பார்ப்பதற்கு அமைதியும் நிம்மதியும் நிலவுவது போலத் தோன்றினாலும், இலங்கையின் வட பகுதியில் உள்ளே மக்களிடையே கடும் கோபமும் குறைகளும் உள்ளன என்று அங்கு அண்மையில் சென்று திரும்பிய இந்திய நாடாளுமன்றக் குழுவின் ஒரு உறுப்பினர் கூறுகிறார்.
போருக்கு பின்னர் வட மாகாணத்தில் சிறிதளவு அமைதி திரும்பியிருந்தாலும், அங்குள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் மனதில் நிறைய குறைகள் இருக்கின்றன என்று அக்குழுவின் ஒரு உறுப்பினரான சௌகத ராய் தெரிவித்தார்.
போர் முடிந்த பிறகு குறைகளைத் தீர்த்து, தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கும் நடவடிக்கையில் பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லை என்றும், 13 ஆவது சட்ட திருத்தத்திலுள்ள அம்சங்களை நடைமுறைப்படுத்துவது, நல்லிணக்க ஆணைக் குழுவின் அபரிந்துரைகளை அமல்படுத்துவது ஆகியவை தொடர்பிலும் முன்னேற்றம் இல்லை என்றும் தமிழ் மக்கள் தம்மிடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.
நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பில் ஒரு கால அட்டவணையும் நிர்ணயிக்கப்பட வேண்டும் எனக் கூறும் அவர், அது மக்கள் மனதில் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கையின் முதல்படியாக அது அமையும் எனக் கூறுகிறார்.
இலங்கையில் தாங்கள் கண்டது, கேட்டது பற்றி இந்திய அரசிடமும் நாடாளுமன்றத்திலும் பேசப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை அரசு இனப்பிரச்சினைகான தீர்வைக் காணும் எனும் நம்பிக்கை தனக்கு இல்லை எனவும் அவர் கூறினார்.
இலங்கை ஜனாதிபதியை சந்தித்தால் அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும், அது இந்தியாவிலுள்ள தமிழ் மக்களின் மனதை புண்படுத்தும் எனும் காரணத்தாலேயே ஜனாதிபதியைச் சந்திப்பதில் இந்தக் குழு ஆர்வம் காட்டவில்லை என்றும் சவுகத் ராய் கூறுகிறார்.
இறுதிகட்ட போரின் போது நடந்ததாகக் கூறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விஷயங்கள் ஐ நா மனித உரிமைகள் குழுவில் விவாதிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து தமது குழு அதிகம் பேசவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.