சரணடைவோரை சுடுமாறு கோத்தபாய உத்தரவிட்டார்: விக்கிலீக்ஸ்

இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட முன்னர் அவரை தாம் சந்தித்ததாகவும் அதன்போது சண்டே லீடர் பத்திரிகையில் வந்த “வெள்ளைக்கொடி விவகாரம்” அனைத்தும் உண்மையானது என பொன்சேகா தன்னிடம் தெரிவித்ததாகவும் அமெரிக்க தூதுவர் பற்றீசியா பூட்டின்ஸ் அமெரிக்க தலைமையகத்திற்கு அனுப்பியுள்ள கேபிள் செய்தியில் குறிப்பிட்டிருந்ததாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அமெரிக்க தலைமையகத்துக்கு அனுப்பிய பாதுகாப்புச் செய்திகள் சிலவற்றை தற்போது விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு கேபிள் ஊடாக அனுப்பட்ட இச் செய்தியில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா பூட்டின்ஸ் தான் சரத் பொன்சேகாவோடு பேசியதாகத் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதம் இலங்கையில் இருந்து வெளிவரும் சண்டே லீடர் பத்திரிகையில் வெள்ளைக் கொடியோடு சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்ட செய்திகள் வெளியாகியிருந்தது.

அதில் சரணடையும் புலிகளின் தலைவர்களை சுட்டுத் தள்ளுமாறு கோத்தபாய உத்தரவிட்டார் என்ற செய்தியை சரத் பொன்சேகா தெரிவித்ததாக அப்பத்திரிகை வெளியிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் சரத் பொன்சேகாவை இலங்கை அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.

ஆனால் அவர் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்னர் அமெரிக்க தூதுவர் சரத் பொன்சேகவைச் சந்தித்ததாகவும், சண்டே லீடர் பத்திரிகையில் வந்த செய்தி அனைத்தும் உண்மையானது என அவர் தெரிவித்ததோடு தாம் அதன் பக்கமே இருப்பதாகவும் அவர் கூறினார் என தூதுவர் பூட்டின்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த விவரங்களை அவர் தனது அமெரிக்க தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த கேபிள் விவரத்தையே தற்போது விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

TAGS: