யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள இரட்சணிய சேனை சிறுவர் இல்லத்தில் தங்கியுள்ள சிறுமிகள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பில் சிறுமியொருவரைப் பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த இல்லத்தில் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த இல்லத்தைச் சேர்ந்த 12 சிறுமிகள் நேற்று அங்கிருந்து தப்பியோடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையைடுத்து, காவல் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து 7 சிறுமிகளை காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தச் சிறுமிகள் மருத்துவ பரிசோதனையின் பின்னர், நீதிமன்ற உத்தரவுக்கமைய வேறு ஒரு சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சிறிபவானந்தராஜா தெரிவித்தார்.
இந்த இல்லத்தைச் சேர்ந்த சிறுமியர்கள் இப்போது நீதிமன்றத்தின் பொறுப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.
வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக கட்டமைப்பு நடைமுறையில் இருந்தவேளையில் பெண்களின் பாதுகாப்புக்கும் அவர்களின் உரிமைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
பெண்கள் நடு இரவில் தனிமையில் சென்றால்கூட அவர்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது. அவ்வாறான ஓர் ஒழுக்கமான நிர்வாக கட்டமைப்பை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் அங்கு கட்டியெழுப்பியிருந்தார்.
திருட்டு, பாலியல் வன்முறை, போதை பாவனை என எந்தவிதமான ஒழுக்க சீர்கேடுகளும் புலிகளின் காலத்தில் இருந்ததே கிடையாது. தமிழர்களின் பாதுகாவலர்களாக புலிகள் படை இருந்தது அன்று.
ஆனால், இன்று ராஜபக்சே தலைமையிலான சிங்கள அரசு தமிழர் தாயகப் பகுதிகளில் ஒழுக்க சீர்கேடுகளை உட்புகுத்தி திட்டமிட்டே தமிழர் கலாச்சாரங்களை அழித்து வருகிறது.