ஆஸியிலிருந்து 39 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

refugee_boatஆஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட 39 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் வியாழக்கிழமை(18.4.13) ஆஸ்திரேலிய அரசின் சிறப்பு விமானம் மூலம் கொழும்பு விமான நிலையம் சென்றடைந்துள்ளனர்.

இதில் 31 தமிழர்கள், 8 பேர் சிங்களவர்கள் என்றும், அதிலும் இருவர் சிறுவர்கள் என்றும் விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக விமான நிலையம் சென்றிருந்த உள்ளூர் செய்தியாளர் ஒருவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

உள்ளூர் நேரம் மதியம் மூன்று மணியளவில் அந்த சிறப்பு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தாலும், இரவு வெகுநேரம் வரை அவர்களை அதிகாரிகள் வெளியே அனுப்பவில்லை.

ஆஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பி அனுப்பட்டவர்களை முதலில் விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளும், பின்னர் இலங்கையின் புலனாய்வு பிரிவினரும் விசாரித்ததாகவும் அந்தச் செய்தியாளர் தெரிவித்தார்.

எனினும் இவர்கள் அனைவரும் விசாரணைக்கு பின்னர், வியாழன் இரவோ அல்லது வெள்ளிக்கிழமை காலையோ விமான நிலையத்திலிருந்து வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள் என அறியக் கிடைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை மாவட்டம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் எனவும் விமான நிலைய அதிகாரிகள் கூறியதாகவும் அச்செய்தியாளர் கூறுகிறார்.

கடந்த ஆண்டிலிருந்து இதுவரை சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு இலங்கையிலிருந்து படகு மூலம் சென்றவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: