நெருக்கடியில் இடைத்தங்கல் முகாம் மக்கள்

வவுனியா பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் இடம் பெயர்ந்தோருக்கான இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை அவர்களின் சொந்த மாவட்டங்களுக்குச் செல்லுமாறு கூறியுள்ள அரசாங்கம், அடிப்படை வசதிகளை நிறுத்தி தங்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியிருப்பதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றார்கள்.

முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா போன்ற பல மாவட்டங்களையும் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த குடும்பங்கள் கடந்த 12 வருடங்களாக இந்த முகாம்களில் வசித்து வருகின்றன.

இந்தக் குடும்பங்களில் ஒரு பகுதியினர் 1990-ம் ஆண்டு இடம்பெயர்ந்து இந்தியாவில் தஞ்சமடைந்திருந்து பின்னர் நாடு திரும்பியவர்கள். ஏனைய குடும்பங்கள் கடந்த 1996-ம் ஆண்டு வன்னிப் பிரதேசத்தில் அரசாங்கம் நடத்திய இராணுவ தாக்குதல்களில் இருந்து விலகியிருப்பதற்காக அப்போதைய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வவுனியாவில் அரசாங்கம் அமைத்திருந்த இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சமடைந்தவர்கள்.

போர் முடிவடைந்து மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன இதனால், இங்குள்ளவர்களை அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு உடனடியாகச் செல்லுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும், இந்த நடவடிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல், தமக்குரிய அடிப்படை வசதிகளான நீர், மின்சாரம், கழிப்பறை வசதிகளை அரசாங்கம் நிறுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பதாகவும் அந்த மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

அத்துடன் தமது மீள்குடியேற்றத்திற்குரிய நடவடிக்கைகளை சீரான முறையில் மேற்கொண்டு தமது பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.