இந்திய அரசுடனான நட்புறவு நல்லமுறையில் உள்ளதாக, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.
இலங்கையில், 2009ல் நடந்த இறுதி கட்ட சண்டையின் போது போர் குற்றம் நடந்ததாகவும், சரணடைந்த ஏராளமான விடுதலை புலிகள் சுட்டு கொல்லப்பட்டதாகவும், தமிழக அரசு உட்பட அங்குள்ள அரசியல் தலைவர்கள் இலங்கை அரசு மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனிடையே, தமிழகத்துக்கு சுற்றுலா வரும் இலங்கை பயணிகள் மீது, சமீபத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதால், இலங்கை தூதரகத்தை கேரளாவுக்கு மாற்றுவது குறித்து அந்நாட்டு அரசு யோசித்து வருவதாக கூறப்பட்டது.
இந்திய அரசுடனான நட்புறவு குறித்து இலங்கை அதிபர் ராஜபக்ஷே, நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள சில தலைவர்கள், இலங்கை மீது அதிருப்தி கொண்டிருந்தாலும், இந்தியாவுடனான ஒட்டு மொத்த உறவு சுமுகமாகவே உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த கட்சி தலைவர்கள் இலங்கையில் சுற்று பயணம் செய்த போது, இங்கு மேற்கொள்ளப்படும் மறுவாழ்வு பணிகள் குறித்து திருப்தி தெரிவித்தனர். இலங்கையின் வடக்கு மாகாணத்தில், தேர்தல் நடத்தும் சூழல் உள்ளது. எனினும் அங்கு தேர்தல் நடத்துவதற்குரிய சூழல் மேம்படுத்தப்படும். இவ்வாறு ராஜபக்ஷே கூறினார்.