ராஜபக்சேவுக்கு நெருக்கமான நபரே என்னை கற்பழித்தார்: ரஷ்யப் பெண் புகார்

russian-womanஇலங்கையில் தங்காலை பகுதியில் கற்பழிக்கப்பட்ட பெண் சில அதிர்ச்சியாக தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்த கற்பழிப்பைத் தடுக்க முயன்ற அவரது காதலர் கொலையும் செய்யப்பட்டது நினைவுகூறத்தக்கது. 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் கிருஸ்துமஸ் தினத்துக்கு ஒரு நாள் முன் நடந்த இந்த சம்பவம் குறித்து இதுவரை அமைதி காத்து வந்த அந்தப் பெண், முதல் முறையாக இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார்.

விக்டோரியா கசேவா (24) என்ற அந்தப் பெண் தெற்கு இலங்கையில் தங்காலை பகுதியில் நேச்சர் ரிசார்ட் என்ற விடுதியில் தனது காதலரான இங்கிலாந்தைச் சேர்ந்த கரூம் ஷேக் (32) என்பவருடன் தங்கியிருந்தார். ஷேக் ரெட்கிராஸ் அமைப்பில் பணியாற்றி வந்தார்.

ஒருநாள் அந்த விடுதிக்கு வந்த ஒரு கும்பல் குடித்துவிட்டு கும்மாளம் அடித்தது. திடீரென அந்தக் கும்பல் விக்டோரியா மீது பாய்ந்தது. அவரை அருகே இருந்த நீச்சல் குளத்தில் அந்தக் கும்பல் தள்ளிவிட்டது. இதைத் தடுக்க வந்த ஷேக்கை அந்தக் கும்பல் பயங்கரமாகத் தாக்கியதில் அவர் மயக்கமானார். பின்னர் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அந்தக் கும்பல் இதையடுத்து விக்டோரியாவை அந்தக் கும்பல் கற்பழித்தது.

ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை போலீசார் இதுவரை உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தனைக்கும் 8 பேர் கொண்ட அந்த கற்பழிப்புக் கும்பலுக்கு தலைமை வகித்தவர் தங்காலை நகராட்டியின் உறுப்பினரான சம்பத் சந்திரா புஷ்ப விதனபத்திரன என்பதும் விடுதி ஊழியர்கள் மூலம் விக்டோரியாவுக்குத் தெரியவந்தது.

இந்த விவரத்தை போலீசாரிடம் விக்டோரியா தெரிவித்ததையடுத்து அவரை கைது செய்த போலீசார் குறுகிய காலத்திலேயே அவரையும் மற்ற 7 பேரையும் ஜாமீனில் வெளிவரச் செய்துவிட்டனர். இவர்கள் மீதான கற்பழிப்பு, கொலை வழக்கை போலீசார் முறையாக நடத்தவில்லை. இவர்களை தப்புவிக்கவே போலீசார் முயற்சிப்பது தெரியவந்துள்ளது.

சம்பத் சந்திரா அதிபர் மகிந்தா ராஜபக்சேவுக்கு மிக நெருக்கமானவர் என்பதாலேயே நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று விக்டோரியா இப்போது புகார் கூறியுள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில் டிஎன்ஏ ரிசல்டுக்காக காத்திருப்பதாக இலங்கை அரசு கூறி வருகிறது.

TAGS: