‘இலங்கை மாநாட்டில் ஆஸ்திரேலியா கலந்துகொள்ளும்’

brendon_o_connerஆஸ்திரேலியாவுக்கு அடுத்ததாக இலங்கை பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டை இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடத்துவதை தாம் ஆதரிப்பதாக தெரிவித்துள்ள ஆஸ்திரேலியா அதில் தாம் கலந்துகொள்வோம் என்றும் கூறியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் பிரஜாவுரிமை அமைச்சரான பிரண்டன் ஓ கொன்னர் அவர்கள் தற்போது இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இலங்கையின் வெளியுறவு அமைச்சரான பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் உட்பட இலங்கை அரசாங்க பிரதிநிதிகள் பலரை சந்தித்து அவர் அங்கு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே அவர் தாம் இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடப்பதை ஆதரிப்பதாகக் கூறியுள்ளார்.

அதேவேளை, இலங்கையில் சுபீட்சம் ஏற்படுவதற்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமல்படுத்துவது என்ற அளவுகோலை இலங்கை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை தனது பிராந்தியத்தில் எதிர்கொள்கின்ற ஒரு பெரிய சிக்கலான பிரச்சினையான, அகதிகள் விடயத்தை (படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு அகதிகள் வரும் விடயத்தை) இரு நாடுகளும் மிகுந்த ஒத்துழைப்புடன் கையாள இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது விடயத்தில் இலங்கை தருகின்ற ஒத்துழைப்புக்கும் அவர் நன்றி கூறினார்.

TAGS: