“அசாத் சாலி கைது, இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மோசமடைவதைக் காட்டுகிறது”

rauf_hakeem_hakkeem_sri_lanka_muslimதமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தலைவராகிய அசாத் சாலி அவர்கள் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணக்கு உட்படுத்தப்பட்டிருப்பதன் மூலம், இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மோசமாகியிருப்பதாக கூறுகிறார் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்.

இலங்கை அரசாங்கத்தில் நீதியமைச்சராக இருந்துகொண்டு இவ்வாறு ரவூப் ஹக்கீம் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வடமாகாண கிளைகளை குறிப்பாக வன்னிப் பிரதேச கிளைகளைப் புனரமைப்பது தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் வவுனியாவுக்கு வந்திருந்த போது அவர் இக்கருத்தை வெளியிட்டிருக்கின்றார்.

வடமாகாணத்தில் உள்ள சிவில் அமைப்புக்களும் அசாத் சாலி கைது நடவடிக்கையை விமர்சித்துள்ளன.

இத்தகைய சூழலில் வடமாகாண சபைக்கான தேர்தல் நல்ல முறையில் நடத்தப்படுமா என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டிருக்கின்றது.

பதிமூன்றாவது திருத்தச் சட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களை முதன்மைப்படுத்தி அறிமுகப்படுத்தப்பட்ட மாகாணசபை முறைக்கு அமைய, வடமாகாணத்திற்கான தேர்தல் 26 வருடங்கள் கடந்த பின்பும் இன்னும் நடத்தப்படவில்லை.

இத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றார்கள். வரும் செப்டம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சே அறிவித்தித்துள்ளார்.

இதனிடையே. வட இலங்கையில் பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சிவில் நடவடிக்கைகளில் அவர்கள் தலையிட்டு வருவது இலங்கையில் நல்லாட்சி குலைய ஒரு முக்கிய காரணம் என கபே எனப்படும் சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பான கஃபே அமைப்பின் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

TAGS: