‘காமன்வெல்த் மாநாட்டில் பிரிட்டிஷ் அரசி எலிசபத் கலந்துகொள்ளமாட்டார்’

commonwealthqueenஇலங்கையில் வரும் நவம்பரில் நடக்க இருக்கும் காமன்வெல்த் உச்சிமாநாட்டில் பிரிட்டிஷ் அரசி எலிசபத் கலந்துகொள்ள மாட்டார். இது குறித்த அறிவிப்பொன்று பக்கிங்காம் அரண்மனையிலிருந்து வெளியாகியிருக்கிறது.

54 நாடுகள் உறுப்பினர்களாகக் கொண்ட காமன்வெல்த் அமைப்பின் இரண்டு வருடத்துக்கு ஒரு முறை நடக்கும் கூட்டங்களை 1971-லிருந்து ஒரே ஒரு முறைதான் அரசி எலிசபத் கலந்துகொள்ளாமல் தவறவிட்டிருக்கிறார். பிரிட்டிஷ் அரசிதான் காமன்வெல்த் அமைப்பின் தலைவி என்பது குறிப்பிடத்தக்கது.

காமன்வெல்த் மாநாட்டில் பிரிட்டிஷ் அரசி கலந்து கொள்ளாமைக்கு தெளிவான காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

எனினும், பிரிட்டிஷ் அரசிக்குப் பதிலாக அவரது வாரிசான, இளவரசர் சார்லஸ், இந்த மாநாட்டில் கலந்து கொள்வார். பிரிட்டிஷ் அரசி தனது அதிகாரங்களை மகனுக்கு விட்டுக் கொடுக்கும் திட்டமாக இது இருக்கலாம் என விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மோசமாக இருப்பதால் அங்கு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை அவ்வமைப்பில் உறுப்பியம் பெற்றுள்ள அனைத்து நாடுகளும் புறக்கணிக்க வேண்டும் எனவும் பிரிட்டிஷ் அரசி இதில் பங்கேற்க கூடாது எனவும் தொடர்ச்சியான அழுத்தங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் பிரிட்டிஷ் அரசியின் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.

1973ம் ஆண்டுக்குப் பின்னர் பிரிட்டிஷ் அரசி முதல் தடவை காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காமல் இருக்கப் போகிறார் என ஸ்கை செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

மனித உரிமை குறித்து இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் கனேடிய பிரதமரும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

TAGS: