“பேச்சைத் தண்டிக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தேவையில்லை”

ranil_wickramasingheஇலங்கையில் ஒரு முஸ்லிம் தலைவரான ஆசாத் சாலியின் கைது இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பினார்

துவேஷத்தைத் தூண்டும் வகையிலான பேச்சுகளை தண்டிப்பதற்கு குற்றவியல் சட்டங்களிலேயே இடம் இருக்கிறது என்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பாய வேண்டிய அவசியம் இல்லை என்றும் ரணில் கூறினார்.

நாட்டில் துவேஷத்தை தூண்டும் வகையான பேச்சுக்களை பலதரப்பினரும் பேசுகிறார்கள் என்பதை அனைவரும் அறிவர் என்று அவர் குறிப்பிட்டார்.

“பேச்சுரிமைகளை மீறி யாராவது செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுவான சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்களில் வழிமுறை உள்ளது. அந்தச் சட்டங்களின் அடிப்படையிலேயே தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.”

நாட்டு மக்களின் இறையாண்மைய காப்பாற்ற ஆயுதங்களை கையிலெடுப்போம் என்றால் அது ஒரு குற்றமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

“சுதந்திரத்தை பேண ஆயுதங்களை கையில் எடுக்கலாம் என்று ஒரு தரப்பில் கருத்து நிலவுகிறது. அப்படியென்றால் சுதந்திரம் எனும் சித்தாந்தத்தின் அடிப்படையில் ஆயுதம் ஏந்துபவர்களையும் தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலிட வேண்டும்.” என்று பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க கூறினார்.

ஆனால் அவரது பேச்சுகள் இனமோதல்களுக்கு வழிவகுக்கும் என்பதாலும், தற்போது நாட்டில் நிலவும் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் இருந்ததாலேயே ஆசாத் சாலி கைதுசெய்ப்பட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க அவர்களின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போது பிரதமர் ஜெயரட்ண நாடாளுமன்றத்தில் பதிலளித்தார்.

ஜூனியர் விகடன் பத்திரிகைக்கு ஆசாத்சாலி அளித்த பேட்டியையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

-BBC

TAGS: