இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் துணை மேயரான அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் வெளியாகும் ஜூனியர் விகடன் சஞ்சிகைக்கு அளித்த பேட்டி காரணமாகவே அசாத் சாலி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக அரசாங்கம் கூறியது.
தமது நியாயங்களை வலியுறுத்தியும், ஜூனியர் விகடனில் வெளியான செய்தி திருத்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தும் அசாத் சாலி தரப்பினர் பாதுகாப்பு அமைச்சுக்கு சத்தியக் கடதாசி வழங்கியதாக அசாத் சாலியின் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தெரிவித்தார்.
தமது விளக்கத்தினால் திருப்தியடைந்த பாதுகாப்பு அமைச்சு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அசாத் சாலியின் விடுதலையைக் கோரி ஜனாதிபதிக்கும் கடிதம் அனுப்பிய பின்னரே இன்று பகல் அவர் விடுதலை செய்யப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டால், அவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் கருத்துக்களை கூறக்கூடாது என்றும் அரச தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அசாத் சாலியின் சட்டத்தரணி கூறினார்.
அசாத் சாலி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும்படி எந்தவிதமான கருத்துக்களையும் கூறவில்லை என்றும் அவரது சட்டத்தரணி அரசுக்கு விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, அசாத் சாலியின் விடுதலையை வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணையை, அரசதரப்பு சட்டத்தரணி கோரியதற்கமைய, நீதிமன்றம் வரும் 28-ம் திகதிவரை ஒத்திவைக்குமாறு இன்று காலை உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
-பிபிசி தமிழோசை