முல்லைத்தீவில் மாவாட்ட அதிகாரியாக தான் கடமையாற்றிய (புலிகளின் நிர்வாகம்) காலப் பகுதியில் அங்கு பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக தன்னிடம் புகார்கள் எதுவும் செய்யப்படவில்லை எனவும் அங்கு பாலியல் வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை என்றும் யாழ்ப்பாண மாவாட்ட அதிகாரி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாகப் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்கள் அளவுக்கதிகமாகக் கிடைத்திருப்பது குறித்து செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கைகயிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் உள்ள பல அரச அலுவலகங்கள், கிராம அலுவலர்கள், பெண்கள் விடுதி எனப் பல இடங்களிலிருந்து யாழ். மாவட்டச் செயலாளருக்கு புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் பல நிறுவனங்களில் பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கும் தூண்டல்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். பெண்கள் ஒரு பாலியல் பொம்மைகள் போன்று பார்க்கப்படுவது மிகவும் கொடூரமான செயல். அவ்வாறு பெண்களைப் பார்ப்பவர்கள் கொடூரமானவர்கள் என அவர் கூறினார்.
நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொடர்ந்து கூறி வருகிறீர்கள். ஆனால் அவ்வாறு நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லையே? என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த மாவட்ட அதிகாரி, விரைவில் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற செயல்களில் ஈடுபட்டோர் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், அதற்காக தனி அலகு ஒன்றை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை உட்பட யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல அரச மருத்துவமனை, பிரபல பெண்கள் விடுதி, கிராம அலுவலர் என பல நிறுவனங்களிலிருந்து பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.
போர் முடிந்த பின்னர் இவ்வாறான சம்பவங்கள் தமிழர் தாயகப் பிரதேசங்களில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.