தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை அரசாங்கத்தினால் நிராகரிப்பு

tna_govtவெளிநாடுகளிலும் அகதிகளாக வசிக்கும் தமிழ் மக்கள் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்குரிய ஒழுங்குகள் புதிய சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கூட்டமைப்பின் கோரிக்கையை அரசு உடனடியாக நிராகரித்துள்ளது.

புலம்பெயர் தேசங்களில் உள்ள இலங்கை மக்கள் தமது வாக்குரிமைகளைப் பயன்படுத்துவதற்கு புதிய சட்ட மூலத்தினூடாக ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இதனை வலியுறுத்தி தேர்தல்கள் ஆணையாளருக்கு எழுத்து மூலமான கோரிக்கையொன்றை அனுப்பவுள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்திருந்தார்.

இதனையே அரசின் சார்பில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் நிராகரித்துள்ளார். கூட்டமைப்பின் கோரிக்கை குறித்து மாவை சேனாதிராசா தெரிவித்திருந்தாவது:

1983 ஆம் ஆண்டு மே முதலாம் திகதிக்கும் 2009 மே 18 ஆம் திகதிக்கும் இடையில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கும் சட்டத்தைக் கொண்டு வர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதனூடாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ள மக்களும் வாக்களிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். வெளிநாடு என்பதில் குறிப்பாக இந்தியாவிலுள்ள ஈழ அகதிகள் மற்றும் கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் அகதி அந்தஸ்துப் பெற்றுள்ளவர்களையும் வடமாகாண சபைத் தேர்தலில் தத்தம் நாட்டில் இருந்தபடியே வாக்களிப் பதற்குரிய நடவடிக்கை மேற் கொள்ளப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரவுள்ளோம்.

தேர்தல்கள் ஆணையாளருடன் கடந்த வருடம் இடம்பெற்ற சந்திப்பில் வெளிநாடுகளிலுள்ள தமிழ் மக்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தோம்.

இதேவேளை, வடமாகாண சபைத் தேர்தலில் இந்தியாவிலுள்ள ஈழ அகதிகள் அங்கிருந்தே வாக்களிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்தபோது வலியுறுத்தியிருந்தோம் என்றார்.

TAGS: