காமன்வெல்த் மாநாட்டுக்கு முன்னதாக மனித உரிமை வேலைத்திட்டம்

kamalesh_sharma_common_wealthஇலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள காமன்வெல்த் உச்சிமாநாட்டுக்கு முன்னதாக, அங்கு மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான செயல்நுட்ப உதவிகளை (Technical support) வழங்க காமன்வெல்த் செயலகம் முன்வந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் பற்றி தேசிய மட்டத்திலான விசாரணை நடத்துவது பற்றி காமன்வெல்த் செயகத்தின் ஊடாக பல நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் டாக்டர் பிரதீபா மஹநாம பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் செயலாளர் கமலேஷ் ஷர்மா குழுவினருடன் அண்மையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர், அடுத்த 6 மாத காலத்துக்குள் இந்த செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்பொருட்டு, வட-அயர்லாந்து, கென்யா, உகாண்டா, சியேராலியோன் உள்ளிட்ட பல நாடுகளின் மனித உரிமை நிபுணர்கள் இலங்கை வந்து நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய தேசிய விசாரணை நடைமுறை தொடர்பில் பயிற்சிகளை வழங்குவார்கள் என்றும் டாக்டர் மஹநாம கூறினார்.

இலங்கையில் கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் குறைந்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் இராணுவத்தினருக்கு மனித உரிமைகள் பற்றி தெளிவூட்டும் வேலைகளும் பல வாரங்களாக நடந்துள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் கூறினார்.

காமன்வெல்த் மாநாடு நடக்கவுள்ள இலங்கையின் மீதே அனைத்து தரப்பினரின் கவனமும் குவிந்துள்ளதாகவும் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் குற்றஞ்சாட்டுவோர் இலங்கைக்கு வந்து நிலைமைகளை நேரில் பார்க்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

‘காமன்வெல்த் செயலாளரும் செயலக அதிகாரிகளும் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலைப் போலல்லாது, இலங்கையுடன் ஒத்துழைத்துச் செயற்படுகிறார்கள்’ என்றும் பிரதீபா மஹநாம கூறினார்.

இதேவேளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுயாதீனமாக இயங்கவில்லை என்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஏராளமான முறைப்பாடுகள் தேங்கிக்கிடப்பதாகவும் சர்வதேச மட்டத்தில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் இருந்துவருகின்றன.

ஆனால் அவ்வாறான குற்றச்சாட்டுக்களையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மறுக்கிறது.

இலங்கையில் இறுதிக்கட்ட போர்க்காலத்தில் நடந்த பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பேற்கச் செய்யும் சுயாதீனமான விசாரணைகளை இலங்கை நடத்தவேண்டும் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்துவது காமன்வெல்த் விழுமியங்களுக்கு ஏற்பட்டுள்ள சோதனை என்றும் கனடா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

TAGS: