கொழும்பில் புத்த பிக்குகள் காவல்துறையுடன் மோதல்

bowatte_protest_colomboஇலங்கையில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை கொண்டுவர வேண்டும் என்றும் பெளத்தர்கள் மற்ற மதங்களுக்கு மாற்றப்படுவதை தடுப்பதற்கு சட்டம் தேவை என்றும் கோரி பெருமளவிலான பிக்குகள் கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

கடந்த வெள்ளியன்று கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக தீக்குளித்து, பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இந்தரத்தன தேரரின் உடலை அவரின் சொந்த இடமான இரத்தினபுரி காவத்தைக்கு கொண்டுசெல்லக்கூடாது என்று பெளத்த பிக்குகள் இன்று காலை முன்னதாக போராட்டம் நடத்தினார்கள்.

அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த கொழும்பு பொரளைப் பிரதேசத்தில் அவர்கள் காவல்துறையினருடன் மோதலிலும் ஈடுபட்டனர்.

உயிரிழந்த பிக்குவின் இறுதிச் சடங்கை கொழும்பில் நடத்த அனுமதிக்க வேண்டுமென்று சிங்கள ராவய என்ற பௌத்த பிக்குகளின் அமைப்பு அதிகாரிகளைக் கோரியது.

இலங்கையில் மாடுகள் உணவுக்காக வெட்டப்படுவதை தடுக்கவேண்டும் என்று கோரியபடியே வெசாக் தினத்தில் இந்தப் பிக்கு தீக்குளித்தார். உயிரிழந்த புத்த பிக்குவின் இறுதிச் சடங்கை கொழும்பில் நடத்துமாறு கடும்போக்கு பௌத்த அமைப்புகள் கோரியுள்ளன

உயிரிழந்த புத்த பிக்குவின் இறுதிச் சடங்கை கொழும்பில் நடத்துமாறு கடும்போக்கு பௌத்த அமைப்புகள் கோரியுள்ளன.

அவரது கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியபடி சிங்கள ராவய என்ற பௌத்த அமைப்பு பொரளையிலிருந்து ஜனாதிபதியின் அலரிமாளிகை நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணியிலும் பின்னர் ஈடுபட்டது.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சிங்கள ராவய பிக்கு ஒருவர், ‘மற்ற மதங்களுக்கு பௌத்தர்களை மாற்றுவதற்கு எதிரான சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவேண்டும். பசுவதையை தடைசெய்யும் விதத்தில் இறைச்சி வெட்டுவது தொடர்பான சட்டங்களை திருத்த வேண்டும்’ என்று கோரினார்.

‘அலரி மாளிகையிலிருந்து பதில் கிடைக்கவில்லை. இன்னும் பிக்குகள் தீக்குளிக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறார்களா. ஆனால் இனி நாங்கள் செத்தால் இன்னும் பலரையும் சேர்த்துக்கொண்டுதான் மரணிப்போம். மாட்டிறைச்சி விற்கும் கடைகளை இவர்களால் நிறுத்த முடியாவிட்டால் அந்த வேலையை நாங்கள் செய்கிறோம். ஆனால் எங்களுக்கு அதிகாரிகள் தடையாக இருக்கக்கூடாது’ என்றும் அந்த பிக்கு ஊடகங்கள் முன்னால் எச்சரித்தார்.

கொள்ளுப்பிட்டி பகுதியில் இந்த ஆர்ப்பாட்டங்களின் நடுவே ஏற்பட்ட களேபரத்தில் காவல்துறை அதிகாரிகள் சிலரும் காயமடைந்துள்ளனர்.

சிங்கள ராவய அமைப்பு இலங்கையில் பொது பல சேனா போன்ற இன்னொரு கடும்போக்கு பௌத்தவாத அமைப்பு. அந்த அமைப்பின் கோரிக்கையின்படி, உயிரிழந்த பிக்குவுக்கு கொழும்பில் இறுதி நிகழ்வு நடைபெறவேண்டும் என்று அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பௌத்தவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் கோரியுள்ளார்.

-BBC

TAGS: