இலங்கையில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியவாதியுமான டாக்டர். ஜயலத் ஜயவர்த்தன அவர்கள் காலமானார். அவருக்கு வயது 59.
நீண்டகாலமாக சுகவீனமுற்றிருந்த அவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த சமயம் அங்கு மரணமானதாக ஐதேக வட்டாரங்கள் தெரிவித்தன.
முதலில் கம்பஹா மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவான பின்னர், தற்போது நீர்கொழும்புக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இருக்கின்றார்.
மனித உரிமைகள் நிலவரம் குறித்து குரல்கொடுத்துவந்த இவரை, அரசதரப்பு அரசியல்வாதிகள் சிலர் துரோகியாக வர்ணித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
1953ம் ஆண்டில் பிறந்த ஜயலத் ஜெயவர்தன 1994ம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தெரிவான அவர், 2002ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரையில் புனர்வாழ்வுத்துறை அமைச்சராக பணியாற்றி இருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி பதவி வகித்த காலங்களில் டொக்டர் ஜயலத் ஜயவர்தன மிக முக்கியமான அமைச்சுப் பொறுப்புக்களை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த காலப் பகுதியில், தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் அதிக அளவில் பேசியுள்ளார்.
மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற பல்வேறு கட்ட சமாதான பேச்சுவார்த்தைகளிலும் ஜயலத் ஜயவர்தன பங்கேற்றிருந்தார்.
அத்துடன், சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை அடிக்கடி சந்தித்து வந்தமையும், அது சார்ந்த போராட்டங்களில் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் பேசும் மக்களுக்கு, பெரும்பான்மை சகோதர இனத்தின் மத்தியில் புதிய நண்பர்கள் உருவாகாத நிலையில், புதிது புதிதாக இனவாத பகைமை பேசுபவர்கள்தான் நாள்தோறும் தோன்றி வருகின்றார்கள்.
இந்நிலையில் நம் மத்தியில் செயற்பட்டு, வாழ்ந்து, இருந்த தமிழ் பேசும் மக்களின் நண்பர் மருத்துவ கலாநிதி ஜயலத் ஜயவர்த்தனவின் மறைவு, இன்றைய இனவாத சூழ்நிலையில் மிகப்பெரும் இழப்பாக என்னால் உணர முடிகின்றது மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.