டிஏபி : தர்மேந்திரனைப் பற்றி ஸாஹிட்டுக்கும் IGP-க்கும் கவலை இல்லை

dharmaதர்மேந்திரன் தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்ததில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் போலீஸ்காரர்களை இடைநீக்கம் செய்வது போலீஸ் படையின் கட்டுக்கோப்பை சீர்குலைக்கும் எனக் கூறியதின் மூலம் உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி ‘மனித நேயமற்ற  பொறுப்பற்ற’ போக்கைக் காட்டியுள்ளதாக டிஏபி சொல்கிறது.

அத்தகைய இரக்கமற்ற கருத்துக்கள் ஸாஹிட் உள்துறை அமைச்சராக இருப்பதற்குத் தகுதியற்றவர்
என்பதையும் உணர்த்தியுள்ளது என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று விடுத்த ஒர்  அறிக்கையில் கூறினார்.

குற்றத்தைப் புரிந்தவர்கள் அவர்கள் சட்டத்தை மதிக்காதவர்களாக இருந்தாலும் சரி அல்லது கடமையில் ஈடுபட்டுள்ள போலீஸ்காரர்களாக இருந்தாலும் சரி ஸாஹிட் பொதுமக்களுடைய பாதுகாப்பை பாதுகாக்கவில்லை,” என லிம் சொன்னார்.

தடுப்புக் காவலில் நிகழ்ந்த தர்மேந்திரன் மரணத்துடன் சம்பந்தப்பட்ட நான்கு போலீஸ்காரர்களும் மேசை வேலைகளுக்கு அனுப்பப்படுவதற்குப் பதில் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என மலேசிய ஹிண்ட்ராப் சங்கத் தலைவர் வேதமூர்த்தி சொன்னதைத் தாம் வரவேற்பதாக ஸாஹிட் இரண்டு நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

என்றாலும் அத்தகைய நடவடிக்கை போலீஸ் படையின் ‘கட்டுக்கோப்பை சீர்குலைக்கும்’ என்பதால்
அதனை மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டும் என ஸாஹிட் எச்சரித்தார்.

தவறான முன்னுரிமைகள்

தேர்தல் சீர்திருத்தங்களைக் கோரும் அமைதியான பேரணிகளில் கலந்து கொள்ளும் பக்காத்தான்
ராக்யாட் தலைவர்களுக்கும் பிரஜைகளுக்கும் எதிராக நடவடிக்கை மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக மருட்டும் தேசிய போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார் தர்மேந்திரன் விஷயத்தில் மௌனமாக இருப்பதாக அவரை லிம் குறை கூறினார்.

கைவிலங்கு போடப்பட்ட நிலையில் தலை முதல் கால் வரையில் 52 காயங்களுக்கான அடையாளங்கள் காணப்பட்ட தர்மேந்திரன் பற்றி ஸாஹிட்டும் காலித்தும் கவலைப்படவே இல்லை என்றார் அவர்.

சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு கொலைக் குற்றம் சாட்டப்பட வேண்டும் என
டிஏபி விரும்புவதாகவும் லிம் சொன்னார்.

சட்ட அமலாக்க அதிகாரிகளுடைய கட்டுப்பாட்டில் இருந்த போது தியோ பெங் ஹாக், ஏ. குகன், அகமட் சார்பானி ஆகியோர் மரணமடைந்ததைத் தொடர்ந்து நிலைமை மேம்பாடு காணும் என
மலேசியர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

“துரதிர்ஷ்டவசமாக தண்டிக்கவும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் தேவையான அரசியல்
உறுதிப்பாடு பிஎன் கூட்டரசு அரசாங்கத்திடம் இருப்பதாகத் தெரியவில்லை.”

IPCMC என்ற போலீஸ் புகார்கள், தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையத்தை அமைப்பதால்
மட்டுமே தடுப்புக் காவல் மரணங்களை தடுக்க பிஎன் கூட்டரசு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்பதை மலேசியர்களுக்கு உணர்த்தும்,” என லிம் மேலும் குறிப்பிட்டார்.