13வது அரசியல் சட்டத் திருத்தத்தில் மாற்றம் செய்ய சிங்கள அரசு திட்டம்

srilanka_flagகொழும்பு : இலங்கையில், வடக்கு மாகாண தேர்தலுக்கு முன்னதாக, 13வது அரசியல் சட்டத் திருத்தத்தில் பல்வேறு திருத்தங்களை செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இலங்கையில், வடக்கு மாகாணத்தில் வரும், செபடம்பர் மாதம் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போதுள்ள 13வது அரசியல் சட்டத் திருத்தம், தமிழர் பகுதிகளுக்கு அதிக அதிகாரம் வழங்க வழி செய்கிறது.

இந்த சட்டத்தை ரத்து செய்யும்படி, இலங்கை ஆளும் கூட்டணியில் உள்ள சிங்கள இனவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர உள்ளது. எனவே, வடக்கு மாகாண தேர்தலுக்கு முன்னதாக, 13வது அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய ராஜபக்சே தலைமையிலான இலங்கை அமைச்சரவை திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ஆளும் கூட்டணிக் கட்சிகள் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய ஒரு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்ட்தாகத் தெரிகிறது.

இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். ஆளும் ஐக்கிய முற்போக்கு சுதந்திரக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிற கட்சிகளும் இதில் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து கொண்டு வரப்பட்ட 13வது அரசியல் சட்டத் திருத்தத்தின் படி, இரு மாகாணங்கள் தாமாக விரும்பி இணைந்துகொள்ள வகை செய்யும் பிரிவை ரத்து செய்ய ஒரு அரசியல் சட்டத்திருத்தத்தை ஆளும் தரப்பு முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.

இலங்கை அரசின் இந்த திட்டத்துக்கு, தமிழ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 13ஏ சட்டப் பிரிவில் திருத்தம் செய்தால் தேர்தலை புறக்கணிக்கவும் தமிழ் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

TAGS: