முன் நாள் விடுதலைப் புலிகள், அதிலும் பெண் போராளிகள் உடுக்க உடை இல்லாத நிலையில் இருப்பதாகவும், தாமே அவர்களுக்கு உடைகளை வழங்குவதாகவும் இராணுவத்தினர் பெரும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் பெரும் செல்வச் செழிப்போடு வாழ்வதாகவும், ஆனால் அவர்கள் இலங்கையில் உள்ள முன் நாள் போராளிகளை கைவிட்டுவிட்டதாகவும் இலங்கை இராணுவம் பரப்புரைகளை மேற்கொண்டுள்ளது.
போராட்டம் நடத்த மட்டுமே பெருந்தொகைப் பணத்தை அனுப்பிய புலம்பெயர் சமூகம், புலிகளின் நல்வாழ்வை விரும்பவில்லை ! நாமே உங்களை பராமரிக்கிறோம் என்பது போன்ற சுயவிளம்பரங்கள் வட கிழக்கில் இராணுவத்தால் திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இச் சுயவிளம்பரமானது மக்கள் மத்தியிலும் முன் நாள் போராளிகள் மத்தியிலும் சிறிய தாக்கத்தை உருவாக்கியுள்ளது என்பது ஓரளவுக்கு உண்மையாகும்.
2009ம் ஆண்டுக்குப் பின்னர் புலம்பெயர் தமிழ் சமூகமானது , ஈழத்தில் அல்லலுறும் எம்மின மக்களுக்கு பாரிய உதவிகள் எதனையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்தவண்ணம் உள்ளது. இன் நிலையில் இதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திவரும் இலங்கை இராணுவமானது, தொடர்ந்து புலம்பெயர் தமிழ்ச் சமூகத்துக்கு எதிராக பாரிய சுயவிளம்பரம் ஒன்றை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.