பாஸ் கட்சியின் உதவித் தலைவர் ஹுசாம் மூசா கைது செய்யப்பட்டு அம்பாங் போலீஸ்
நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அந்தத் தகவலை அவரது உதவியாளர்களில் ஒருவர் உறுதி செய்துள்ளார்.
அவர் 1948ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டத்தின் பிரிவு 4(1)(பி) யின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் அவர் எங்கு கைது செய்யப்பட்டார் என்பதும் எதற்காக விசாரிக்கப்படுகிறார் என்பதும் தெரியவில்லை.
இந்த பேரணியில் இறக்கின்றவர்கள் தியாகிகள் ஆவர் என அவர் அண்மையில் விடுத்த அறிக்கை தொடர்பாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இதனிடையே பாடாங் மெர்போக்கில் கூட்டத்தில் உரையாற்ரிய பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் அந்தப் பேரணியை பெர்சே ஆதரிப்பதாகச் சொன்னார். காரணம் தேர்தல் ஆணையத் தலைவர்கள் பதவி துறக்க வேண்டும் என பேரணி கேட்டுக் கொள்கிறது என்றார் அவர்.
தேர்தல் தொகுதி எல்லை மறுநிர்ணய நடவடிக்கையை நடப்பு தேர்தல் ஆணையத் தலைமைத்துவம் கண்காணிக்கக் கூடாது எனக் குறிப்பிட்ட அவர், அது அனுமதிக்கப்பட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றார்.
“அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு நாம் எதுவும் செய்ய முடியாமல் போய் விடும்.”
பாடாங் மெர்போக்கில் 30,000 பேர் கூடியுள்ளதாக சுங்கைப் பட்டாணி எம்பி-யும் பேரணி இயக்குநருமான ஜொஹாரி அப்துல் சொன்னார்.
அந்தத் திடலில் கூடியுள்ள மக்கள் எண்ணிக்கை அம்னோவும் பிஎன் -னும் விடுத்த மிரட்டல்களை மக்கள் புறக்கணித்து விட்டதைக் காட்டுகின்றது என சிலாங்கூர் துணை சபாநாயகர் நிக் நாஸ்மி நிக் அகமட் கூறினார்.
மே 5ம் தேதி மக்கள் வென்றனர். அம்னோ/பிஎன் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்னும் தெளிவான செய்தியை மக்கள் அனுப்பியுள்ளனர்,” என்றார் அவர்.
எல்லா தேர்தல் மனுக்களுக்கும் இறுதி முடிவு கிடைக்கும் வரை போராட்டத்தைப் பக்காத்தான் தொடரும் என்றும் அவர் சொன்னார்.
இதனிடையே அனாக் அமைப்பின் தலைவர் மஸ்லான் அலிமான் மோசடியின் விளைவாக பிஎன் அரசாங்கத்துக்கு அதிகாரம் கிடைத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
அழியா மை குளறுபடி காரணமாக இசி தலைவர்கள் உடனடியாக விலக வேண்டும் என பாஸ் கோலாக் கிராய் எம்பி ஹட்டா ராம்லி கேட்டுக் கொண்டார்.
அழியா மை விவகாரம் தமது வாழ்க்கையில் சோகமான கட்டம் என இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் சொன்னாலும் அவரை மன்னிக்க முடியாது, அவர் விலக வேண்டும் என்றார் அவர்.
முன்னாள் பேராக் மந்திரி புசார் நிஜார் ஜமாலுதின் தமது உரையில் பேராக்கில் பக்காத்தான் ராக்யாட் 55 விழுக்காடு வாக்குகளை வென்றுள்ள வேளையும் பிஎன் -னுக்கு 44 விழுக்காடு வாக்குகளே கிடைத்துள்ளதாகச் சொன்னார்.
மக்கள் பிஎன் -னை நிராகரித்துள்ளனர். பக்காத்தான் அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என மக்கள் விரும்புவதை அது காட்டுகிறது என்றார் அவர்.
பிஎன் செய்துள்ளதாகக் கூறப்படும் எல்லாக் கோளாறுகளையும் நிரூபிக்க பாஸ் வழக்குரைஞர்கள் எட்டு தேர்தல் மனுக்களைச் சமர்பித்துள்ளதாக கூறிய நிஜார், இரண்டு இடங்கள் பெரும்பான்மையில் மாநில நிர்வாகத்தை பிஎன் தனது கட்டுக்குள் வைத்துள்ளதாக தெரிவித்தார்.
“நாம் எட்டு மனுக்களில் இரண்டில் வெற்றி பெற்றால் கூட ஜாம்ரி (பேராக் மந்திரி புசார்) விழுந்து விடுவார்,” என சங்காட் ஜெரிங் சட்டமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.