இலங்கையில் உரத்திற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகக் கூறுகின்றார்கள்.
உரத்தின் விலை அதிகரித்ததையடுத்து, அரசாங்கம் மானிய விலையில் விவசாய சேவை நிலையங்களின் ஊடாக உரத்தை விவசாயிகளுக்கு விநியோகித்து வருகின்றது.
ஆயினும், இவ்வாறு வழங்கப்படுகின்ற உரத்தின் அளவும் படிப்படியாகக் குறைக்கப்பட்டிருப்பதாக வவுனியா வடக்கு ஒருங்கிணைந்த மாதிரி பண்ணையாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் வைரமுத்து பூபாலசிங்கம் கூறுகின்றார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு, ஒரு ஏக்கருக்கு 106 கிலோ யூரியாவும், 30 கிலோ எம்.ஏ.பியும், 35 கிலோ டி.எஸ்.பியும் மானிய விலையில் விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்டது.
இப்போது யூரியா 64 கிலோவாகவும், பொட்டாஷ் 16 கிலோவாகவும், ஃபாஸ்பேட் 16 கிலோவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக பூபாலசிங்கம் கூறுகின்றார். இது விவசாயத் தேவைக்குப் போதாது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அதேநேரம், நெல் பயிரிடுவதற்கு மட்டுமே விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்கப்படுகின்றது.
வெங்காயம் போன்ற மேட்டுநிலப் பயிர்ச்செய்கைகளுக்கு உரம் மானிய விலையில் வழங்கப்படுவதில்லை என்று கூறும் பூபாலசிங்கம் அவர்கள் வெளிச்சந்தையில் உரத்தை வாங்குவதற்கும் வழியில்லை எனவும் கூறுகிறார்.
வெளிச்சந்தையில் உரம் கிடைப்பதில்லை என்றும் அதன் காரணமாக விவசாய நடவடிக்கைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக பூபாலசிங்கம் குறிப்பிடுகின்றார்.
முன்னர் ஒன்றுக்குப் பதினைந்து என்ற விகிதத்தில் விளைந்த வெங்காயம், உரம் இல்லாத காரணத்தினால், ஒன்றுக்கு நான்கு அல்லது ஐந்து என்ற விகிதத்தில்தான் அறுவடை செய்ய முடிகின்றது என்றும் அவர் மேலும் கூறுகிறார்.
இலங்கை சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளாகின்றன. ஆயினும் உர உற்பத்தியில் நாடு தன்னிறைவடையவில்லை.
நாட்டின் உரத் தேவைகள் இன்னும் இறக்குமதியிலேயே தங்கியிருக்கின்றன. இதனால் விவசாயத் தொழில் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக நேர்ந்திருக்கின்றது.
உள்நாட்டில் உரத் தயாரிப்பு தேவையான மூலப் பொருட்கள் இருக்கிறது என்றும், இலங்கையிலேயே உர உற்பத்தியை மேற்கொள்ள முடியுமாக இருந்தால், இந்தப் பிரச்சினைகக்கு ஓரளவுக்கு தீர்வு காணக் கூடியதாக இருக்கும் என்று கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளாதரத் துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் கணேசமூர்த்தி தெரிவித்தார்.