லிபியாவில் மேற்குலகின் ஆதரவுடன் கடாஃபியை ஒழித்துக்கட்டி அரசமைக்கும் முயற்சியில் இறுதிக்கட்டப் போரில் ஈடுபட்டிருக்கின்ற கிளர்ச்சிப் படைகளின் இடைக்கால நிர்வாகத்தினர் ஏதேச்சாதிகார கைதுகளையும் கைதிகள் மீதான துன்புறுத்தல்களையும் நிறுத்த வேண்டுமென்று மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்பியுள்ளன.
அண்மைய மாதங்களில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு மோசமாக நடத்தப்படுவதாக தமக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக லண்டனை தலைமையகமாக கொண்டியங்கும் ‘அம்னஸ்டி இன்ரநேஷனல்’ அறிக்கை வெளியிட்டுள்ளது.
முவம்மர் கடாஃபிக்கு விசுவாசமான இராணுவ ஆளணிகளைச் சேர்ந்தவர்கள் என்று குற்றஞ்சாட்டப்படுகின்ற, வரைபடத்தில் சஹாரா பாலைவனத்துக்கு கீழேவுள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களே கிளர்ச்சிப் படையினரால் இலக்கு வைக்கப்படுவதாக அம்னஸ்டி இன்ரநேஷனல் சுட்டிக்காட்டுகின்றது.
‘புதிய லிபியாவில் கறைபடியச் செய்யும் துஷ்பிரயோகங்கள்’
சுமார் 300 கைதிகளிடம் பேசியுள்ள அம்னஸ்டி இன்ரநேஷனல், “புதிய லிபியாவில் கறை படியச் செய்யும் தடுப்புக்காவல் துஷ்பிரயோகங்கள்” என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
திரிப்போலிக்குள்ளும், வெளியில் சாவியா மற்றும் மிஸ்ரட்டா உள்ளிட்ட நகரங்களிலுமுள்ள 11 தடுப்புக்காவல் முகாம்களுக்குச் சென்றுள்ள அம்னஷ்டி இன்ரநேஷனல், கடாஃபி விசுவாசிகள் என்று நம்பப்படுபவர்கள், கடாஃபி இராணுவ ஆளணியைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகப்படுவோர் போன்றோர் மீது கடுமையான சித்தரவதைகள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக கண்டறிந்துள்ளது.
குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை எடுப்பதற்காக அல்லது தண்டனைகளாக தடுப்புக்காவலில் இருப்பவர்கள் மீது சித்திரவதைகள் புரியப்பட்டுள்ளமைக்கு தெளிவான சான்றுகள் இருப்பதாக அம்னஷ்டி இன்ரநேஷனல் கூறுகின்றது.
அம்னஷ்டி இன்ரநேஷனல் சார்பில் தடுப்புக்காவல் நிலையங்களுக்குச் சென்றவர்கள், முகாமொன்றில் சித்திரவதை ஆயுதங்களை அவதானித்ததாகவும் இன்னொரு முகாமில் கசையடி மற்றும் கதறல் சத்தங்களை கேட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறுவதற்காக கைதிகளை தாக்கியதை குறைந்தது இரண்டு தடுப்புக்காவல் முகாம் காவலர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர்.
திரிப்போலியிலும் அதனை அண்டிய இடங்களிலிருந்து மட்டும் அனேகமாக பிடியாணையின்றி சுமார் 2500 பேர் வரையில் என்.டி.சி படைகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளர்ச்சிப்படையின் இடைக்கால நிர்வாகமும், தாம் மனித உரிமைகளை பேணுவதாகவும் நாட்டின் நீதிக்கட்டமைப்பை மறுசீரமைப்பதாகவும் தொடர்ச்சியாக கூறிவருகிறது.