~இராகவன் கருப்பையா- ‘ஸ்கேமர்ஸ்'(Scammers) எனப்படும் மோசடிக்காரர்களின் வலையில் மாட்டாமல் சமாளித்துத் தப்பித்துக் கொள்வதில் நம் சமூகத்தினர் கெட்டிக்காரர்கள் என ஆய்வு ஒன்று காட்டுகிறது.
இத்தகைய ஏமாற்றுப் பேர்வழிகள் அப்பாவி மக்களை தொலைபேசியில் அழைத்து, நயவஞ்சகமாகப் பேசி, அல்லது பயமுறுத்தி பணம் பறிப்பதில் வல்லவர்கள், அனுபவசாலிகள்.
பொது மக்களிடமிருந்து மில்லியன் கணக்கான ரிங்கிட்டை அந்தக் கயவர்கள் ஏமாற்றிப் பறிப்பதாக அனுதினமும் செய்திகள் வெளிவந்த வண்ணமாகத்தான் உள்ளன.
இருப்பினும் இந்திய சமூகத்தினரிடம் அவர்களுடைய ஜம்பம் அவ்வளவாகப் பலிக்கவில்லை என ஆய்வின் வழி தெரிகிறது என்று காவல் துறை அறிவித்துள்ளது.
பினேங் மாநிலத்தில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் காவல்துறை இத்தகவலை வெளியிட்டதாக ‘மை சின்சியூ’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஏமாற்றுப் பேர்வழிகள் இந்த உண்மைய ஒப்புக் கொண்டதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
எப்படிப்பட்ட ஏமாற்றுப் பேர்வழிகளாக இருந்தாலும் அவர்களிடம் சாதுர்யமாகக் கேள்விக் கணைகளைத் தொடுத்து, அவர்களைக் குழப்பி, ஏமாறாமல் தப்பித்துக் கொள்வதில் நம் சமூகத்தினரிடம் இருக்கும் திறமையைதான் இது காட்டுகிறது.
உதாரணத்திற்கு, “உங்கள் குடும்ப உறுப்பினரை கடத்தியுள்ளோம்,” என்று தொலைபேசியில் மிரட்டும் ஒரு ஏமாற்றுப் பேர்வழியிடம் கொஞ்சமும் தளராமல், “என்ன, கடத்தலா? யார்? எப்படி? ஏன்? எங்கு? எதற்கு? எப்போது?” என சரமாரியாகக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போவதில் நம் சமூகத்தினர் திறமைசாலிகள்.
ஏமாற்றுக்காரர்கள் தங்களுடைய முயற்சிகளைக் கைவிடும் வரையில் நம் சமூகத்தினரின் கேள்விக் கணைகள் தொடர்ந்து பாய்ந்துக் கொண்டிருக்கும். இதனால் அவர்கள் குழம்பிப்போய், வேறு வழியின்றி தங்களுடைய முயற்சிகளைக் கைவிடுவதாக சொல்லப்படுகிறது.
மற்ற இனத்தவரோடு ஒப்பிடுகையில இந்திய சமூகத்தினர் அளவுக்கு அதிகமானக் கேள்விகளைக் கேட்கின்றனர் என ஏமாற்றுக்காரர்கள் தங்களுடைய வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
“நாங்கள் எல்லா இனத்தவரையும் சரிசமமாகத்தான் தொலைபேசியில் அழைக்கிறோம். ஆனால் இந்திய சமூகத்தினரை ஏமாற்றுவது மிகவும் கடினமாக உள்ளது,” என்று அவர்கள் சாட்சியமளித்துள்ளனர்.
பினேங் மாநிலத்தில் சீன சமூகத்தைச் சேர்ந்த மொத்தம் 2,299 பேர் கடந்த ஆண்டில் ஏமாற்றுப் பேர்வழிகளிடம் பணத்தை இழந்துள்ள வேளையில், அக்காலக் கட்டத்தில் அங்கு 2,041 மலாய்க்காரர்கள் அதே போல நஷ்டப்பட்டுள்ளனர்.
“எனினும் அவ்வாறு பணத்தை இழந்த இந்தியர்களின் எண்ணிக்கை வெறும் 381 மட்டுமே,” என காவல்துறை அறிவித்துள்ளது.























