இராகவன் கருப்பையா – சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் திடீரென புதையுண்டு காணாமல் போன இந்திய சுற்றுப் பயணியின் குடும்பத்தினர் நீதிமன்றம் சென்று இழப்பீடு கோர வேண்டும் என உத்தரவிடுவது ஏற்புடையதாக இல்லை.
கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி காலையில் 48 வயது விஜயலட்சுமி சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென உள்வாங்கிய நடைபாதை, கண் இமைக்கும் நொடிப் பொழுதில் கொடூரமான வகையில் அவரை விழுங்கிய சம்பவத்தை நாம் இன்னும் மறக்கவில்லை.
அவரை மீட்பதற்கு ஒரு வாரத்திற்கும் மேல் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் அத்தனையும் தோல்வியில்தான் முடிந்தது.
அதனைத் தொடர்ந்து விஜயலட்சுமியின் குடும்பத்தினருக்கு நம் அரசாங்கம் முதல் கட்ட உதவித் தொகையாக 30 ஆயிரம் ரிங்கிட்டை வழங்கிய போதிலும் இதுநாள் வரையில் வேறு எந்த இழப்பீடும் வழங்கவில்லை.
“இவ்விபத்து முன்னுதாரணம் இல்லாத ஒன்று. எனவே அவருடைய குடும்பத்தினர் நீதிமன்றம் சென்றுதான் கோரிக்கை விடுக்க வேண்டும்,” என சுமார் ஒரு மாதத்திற்கு முன் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா யோ அறிவித்தார்..
சம்பவம் நிகழ்ந்த போது கூட்டரசுப் பிரதேச அமைச்சராக இருந்த ஸலேஹா இஸ்மாயில், இழப்பீடு குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
ஆனால் அதன் பிறகு ஒரு அணுவும் நகரவில்லை. விஜயலட்சுமியின் குடும்பத்தினருக்கு ‘இலவு காத்த கிளி’யைப் போன்ற நிலைதான் ஏற்பட்டது. ஒரு சல்லிக் காசும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது வருத்தமான விஷயம்.
இப்படிப்பட்ட குழலில், “நீதிமன்றம் வாயிலாக இழப்பீட்டைக் கோருங்கள்,” என ஹன்னா குறிப்பிடுவது ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது’ போல்தான் உள்ளது.
அரசாங்கத்திடமிருந்து இறப்புச் சான்றிதழைப் பெறுவதற்குக் கூட அந்த குடும்பத்தினர் பல ஆயிரம் ரிங்கிட் செலவு செய்து வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது.
“கடந்த ஃபிப்ரவரி மாதத்தில் அதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டு, 2 மாதங்களில் அந்த இறப்புப் பத்திரத்தை நாங்கள் பெற்றுக் கொடுத்தோம்,” என விஜயலட்சுமியின் குடும்பத்தைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் பார்த்தியன் கூறினார்.
“மரண இழப்பீட்டுக் கோரிக்கையையும் நாங்கள் நீதிமன்றத்திற்குக் கொண்டுச் சென்றால் நியாயமானத் தீர்வு கிடைப்பதற்கு நீண்ட நாள்கள் ஆகும். ஏறத்தாழ 3 ஆண்டுகள் கூட நீட்டிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.”
“அது மட்டுமின்றி அந்தக் குடும்பத்தினருக்கு அதிகமானச் செலவுகளும் ஏற்படும். ஒவ்வொரு முறையும் இந்தியாவில் இருந்து அவர்கள் இங்கு வந்துச் செல்வதற்கு ஆயிரக் கணக்கான ரிங்கிட் செலவாகும்.”
“எனவே இவ்விவகாரத்தை நீதிமன்றத்திற்குக் கொண்டுச் செல்லாமல் அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்தி இரு தரப்பினருக்கும் ஏற்புடைய நியாயமான ஒரு தொகையை பெற்றுக் கொடுக்க முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் அதற்கான வாய்ப்பும் அமையவில்லை,” என பார்த்திபன் விவரித்தார்.”
“உங்கள் கோரிக்கையை நீதிமன்றத்தில் பதிவு செய்யுங்கள்,” என ஹன்னா திட்டவட்டமாக அறிவித்துவிட்டார் என்று அந்த வழக்கறிஞர் மேலும் குறிப்பிட்டார்.
நம் நாட்டுக்கு வருகையளித்திருந்த ஒரு சுற்றுப் பயணிக்கு உகந்த பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டோம் என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அந்த கொடிய விபத்தை தெள்ளத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டும் காணொளிகள் அதற்குச் சான்று.
அப்படிப்பட்டச் சூழலில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் சொல்லொண்ணாத் துயரில் மூழ்கியிருக்கும் அந்தக் குடும்பத்தினருக்கு பரிவு காட்டுவது நமது கடப்பாடாகும். இதில் மாற்றுக் கருத்து இல்லை.
அதனை விடுத்து, ஒரு தவறும் இழைக்காத அவர்களை மேலும் புண்படுத்தும் வகையில், “நீதிமன்றத்திற்குச் செல்லுங்கள். அதன்படிதான் நாங்கள் செயல்படுவோம்,” என்று குறிப்பிடுவது எவ்வகையிலும் ஏற்புடையதாக இல்லை.
























