சாலைப் போக்குவரத்துச் சட்டத்திருத்த மசோதா திங்கட்கிழமை தாக்கல்

சட்டவிரோத பந்தயங்கள் மற்றும் டோண்டோ – அதிகாரிகளை வேவு பார்க்கும் சட்டவிரோதச் செயல்கள் நடவடிக்கைகளைக் குற்றவியல் குற்றமாக்குவதற்கான விதிகள் உட்பட, 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் தொடர்ச்சியான பல திருத்தங்களை போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் திங்கட்கிழமை தாக்கல் செய்யவுள்ளார்.

இந்தத் திருத்தங்கள் மூலம், மீண்டும் மீண்டும் குற்றம் செய்பவர்களுக்கான அபராதத் தொகை உயர்த்தப்படும் என்பதோடு, இ-ஸ்கூட்டர்கள் மற்றும் ஹோவர்போர்டுகளின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டங்களும் கொண்டு வரப்படும்.

இந்த மசோதா திங்கட்கிழமை முதல் வாசிப்புக்காகத் தாக்கல் செய்யப்படும் என்றும், செவ்வாய்க்கிழமை மாலைக்குள் இது மக்கள் அவையில் நிறைவேற்றப்படும் என நம்புவதாகவும் லோக் கூறினார்.

இந்தச் சட்டத்திருத்தங்கள், எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் ஆய்வுக்குப் பின்னரே கொண்டுவரப்படுகின்றன, என்று முன்மொழியப்பட்டுள்ள சட்டத்திருத்தங்கள் குறித்த சிறப்பு விளக்கக் கூட்டத்தில் அவர் கூறினார்.

மொத்தம் 44 திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக லோக் தெரிவித்தார்.

சட்டவிரோத பந்தயங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த லோக், கடந்த காலங்களில் குற்றவாளிகளிடம் சாலை வரி இல்லாவிட்டால் அல்லது அவர்கள் வாகனங்களை அனுமதியின்றி மாற்றியமைத்திருந்தால் மட்டுமே அதிகாரிகளால் அவர்களுக்குச் சம்மன் அனுப்ப முடிந்தது என்று கூறினார்.

ஆனால், சட்டவிரோத பந்தயத்தில் ஈடுபடுவதற்கென தனியான சட்டப்பிரிவு இல்லாததால், எங்களால் அவர்கள் மீது (சட்டவிரோத பந்தயத்திற்காக) வழக்குப் பதிவு செய்ய முடியவில்லை.

இந்தத் திருத்தங்களின் மூலம், நாங்கள் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய முடியும்; இது ஒரு சிறந்த முற்றுப்புள்ளியாக அமையும் என்று நம்புகிறோம், என்று கூறிய அவர், சட்டவிரோத பந்தயங்கள் “குறிப்பாக வார இறுதி நாட்களில் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மீண்டும் மீண்டும் குற்றம் செய்பவர்களுக்கான அதிகபட்ச அபராதத் தொகையை உயர்த்துவதற்கான முன்மொழிவு குறித்து லோக் மேலும் கூறுகையில், தற்போதுள்ள 300 ரிங்கிட் அபராதம் குற்றங்களைத் தடுப்பதில் எந்தவொரு பலனையும் அளிக்கவில்லை என்பதைக் கண்டறிந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

சட்ட அமலாக்கப் பிரிவினரிடமிருந்து தப்பிப்பதற்காகக் குற்றக் கும்பல்களுக்கு வேவு பார்க்கும் நபர்களாகச் செயல்படும் டோண்டோக்கள் பிரச்சினையை கையாளுவதற்குத் தற்போது குறிப்பிட்ட சட்டங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

இந்த டோண்டோக்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளைப் பின்தொடர்ந்து சென்று அவர்களின் பணிகளுக்கு இடையூறு விளைவிப்பதோடு, அவர்கள் இருக்கும் இடங்கள் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்,” என்று லோக் கூறினார்.

மற்ற திருத்தங்களில், சிறிய விபத்துகளில் சிக்கியவர்கள் இணையம் வழியாக காவல் துறையில் புகார் அளிக்க அனுமதிப்பது, நிலுவையில் சம்மன் அல்லது வழக்குகள் உள்ள வாகன உரிமையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிப்பது மற்றும் அதே போன்ற பிரச்சினைகளைக் கொண்ட வெளிநாட்டு வாகனங்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பது ஆகியவைகளும் அடங்கும்.

மேலும், போலி ஆவணங்களைச் சமர்ப்பிப்பது அல்லது சாலைப் போக்குவரத்துத் துறைக்கு  தவறான தகவல்களை வழங்குவது ஆகியவற்றுக்கான தண்டனையை அதிகரிப்பதற்கும் இந்தத் திருத்தங்கள் வழிவகை செய்கின்றன.

சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குக் குற்றவாளிகள் கட்டாயமாக இழப்பீடு வழங்குவதற்கான ஒரு தனித் திருத்த மசோதா இந்த ஆண்டின் பிற்பகுதியில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

கடந்த மார்ச் மாதம் கிள்ளான் பகுதியில் மது மற்றும் போதைப்பொருள் அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட ஒரு பயங்கர விபத்தைத் தொடர்ந்து, குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குக் கட்டாய இழப்பீடு வழங்குவதற்கான விதிகளை அமைச்சகம் தயாரித்து வருவதாக லோக் தெரிவித்திருந்தார்.

இந்தச் சாலைப் போக்குவரத்துச் சட்டம் கடைசியாக 2020-ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது, அப்போது கடுமையான தண்டனைகள் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

-fmt