16-ஆவது பொதுத் தேர்தலில் தங்களது அரசியல் கூட்டணியை நீட்டிப்பது குறித்து பாரிசான் நேஷனல் மற்றும் பெரிகாத்தன் நேஷனல் ஆகிய கூட்டணிகள் இதுவரை விவாதிக்கவில்லை என்று அம்னோ துணைத் தலைவர் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
மாநிலத் தேர்தலைத் தொடர்ந்து, புதிய நெகிரி செம்பிலான் அரசாங்கத்தைப் பலப்படுத்துவதற்கே தற்போதைய முக்கிய முன்னுரிமை என்று வான் ரோஸ்டி கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.
நாங்கள் இன்னும் அது குறித்து விவாதிக்கவில்லை. தற்போதைக்கு, நெகிரி செம்பிலானில் உள்ள விவகாரங்களை முதலில் சுமுகமாக முடிக்க விரும்புகிறோம். அதன் பிறகு, மற்ற பிரச்சினைகள் குறித்து விவாதிப்போம், என்று அவர் கூறினார்.
அதற்குப் பிறகு, மலாக்காவின் அரசியல் நகர்வுகளை நாங்கள் கவனிப்போம்,” என்று இன்று தெமர்லோவில் நடைபெற்ற ஒரு நிகழ்விற்குப் பின் அவர் கூறியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெகிரி செம்பிலானில் ஏற்பட்டுள்ள பாரிசான் நேஷனல் மற்றும் பெரிகாத்தன் நேஷனல் ஆகிய கூட்டணிகள் ஒத்துழைப்பானது அவ்வப்போது மறுஆய்வு செய்யப்படும் என்று பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாதி அவாங் இதற்கு முன்னர் கூறியிருந்தார். இக்கூட்டணி மலாக்கா தேர்தல் மற்றும் இறுதியாக 16-ஆவது பொதுத்தேர்தல் வரை நீட்டிக்கப்படலாம் என்ற யூகங்களை அவரது அந்த அறிக்கை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
மலாக்கா மாநிலத் தேர்தலுக்கும் பாரிசான் நேஷனல் மற்றும் பெரிகாத்தன் நேஷனல் ஆகிய கூட்டணிகள் நீட்டிக்கப்படும் என்று பாரிசான் தலைவரும் அம்னோ தலைவருமான அகமட் ஜாஹித் ஹமிடி கூறியிருந்தார்.
நேற்று நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், போட்டியிட்ட 36 இடங்களில் 25 இடங்களை பாரிசான் மற்றும் பெரிகாத்தன் கூட்டணிகள் கைப்பற்றின. இதன் மூலம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கான போதிய இடங்களை இவ்விரு கூட்டணிகளும் உறுதி செய்துள்ளன.
இதில் 18 இடங்களை வென்ற பாரிசான் மிகப்பெரிய கூட்டணியாக உருவெடுத்துள்ளது, அதேவேளையில் பெரிகாத்தன் ஏழு இடங்களைக் கைப்பற்றியது. மீதமுள்ள 11 இடங்களை பக்காத்தான் ஹரப்பான் வென்றது.
கடந்த இரவில், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி தோல்வியடைந்ததற்கு, அதன் அரசியல் எதிரிகள் அடையாள அரசியலை கையாண்டதே காரணம் என்று பக்காத்தான் ஹரப்பான் தேர்தல் இயக்குனர் அமிருதின் ஷாரி குற்றம் சாட்டினார்.
இருப்பினும், பிஎன் கூட்டணி இனவாத பிரச்சாரங்களை மேற்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை வான் ரோஸ்டி நிராகரித்தார். வேட்பாளர்களின் நம்பகத்தன்மை மற்றும் நிலையான அரசாங்கத்திற்கான வாக்குறுதி ஆகியவற்றின் அடிப்படையிலேயே வாக்காளர்கள் தங்களின் முடிவை எடுத்துள்ளனர் என்பதை இந்தத் தேர்தல் முடிவு காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.
நாங்கள் இனவாத அரசியலைக் கையாண்டிருந்தால், மலாய் வாக்காளர்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு தொகுதியில் மசீச வேட்பாளர் எவ்வாறு வெற்றி பெற முடியும்? மலாய் வாக்காளர்கள் இன்னமும் மசீச வேட்பாளரை ஆதரித்துள்ளனர், என்று அவர் கூறினார்.
-fmt
























