விலங்குகளுக்கு எதிரான சித்திரவதைகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும்—அமலாக்கத்துறை அதிகாரிகளாகவே இருந்தாலும்—அவர்கள் மீதான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க முடியாது என்று சிலாங்கூர் சுல்தானியா தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் எச்சரித்துள்ளார்.
இந்தத் தடை தனிநபர்கள், அமைப்புகள், நிறுவனங்கள், அரசு முகமைகள் மற்றும் அதிகாரத்துவ அமைப்புகள் என அனைவருக்கும் சமமாகப் பொருந்தும் என்று அவர் கூறினார்.
“சட்டத்திற்கு முன் அனைவரும் சமமே,” என்று சிலாங்கூர் அரண்மனை அலுவலகத்தின் முகநூல் (Facebook) பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘எஸ்பிசிஏ சிலாங்கூர்’ (SPCA Selangor) அமைப்பின் ‘ஸ்ட்ரே ஃப்ரீ சிலாங்கூர்’ (Stray Free Selangor) திட்டத்தின் அரச ஆதரவாளரான தெங்கு பெர்மைசூரி, வளர்ப்புப் பிராணிகள் மற்றும் தெருநாய்கள், பூனைகள் போன்ற வீடற்ற விலங்குகளுக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற சித்திரவதைச் சம்பவங்கள் குறித்து தனது ஆழந்த வருத்தத்தையும், ஏமாற்றத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்தினார்.
விலங்கு வதை செயல்களில் ஈடுபடுபவர்களின் பதவி, பின்னணி அல்லது அவர்கள் கூறும் காரணங்கள் எதுவாக இருந்தாலும், இத்தகைய செயல்கள் சகித்துக்கொள்ளப்படாது என்று அவர் வலியுறுத்தினார்.
“விலங்குகளுக்கு எதிரான எந்தவொரு வதை செயலும் ஏற்றுக்கொள்ளப்படாது அல்லது சகித்துக் கொள்ளப்படாது. குற்றம் சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும் சரி, அவர்களின் பதவி எதுவாக இருந்தாலும் சரி, அவர்களின் இனம் அல்லது மதம் எதுவாக இருந்தாலும் சரி, அவர்கள் என்ன காரணம் கூறினாலும் சரி,” என்று அவர் கூறினார்.
விசாரணை தொடக்கம்
விலங்குகளுக்குத் தீங்கு விளைவிப்பவர்கள் மீது தீவிர விசாரணை நடத்தப்பட்டு, பொருத்தமான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இதில் அமலாக்க முகமைகளின் உறுப்பினர்கள் அல்லது அதிகாரிகளும் அடங்குவர் என்றும் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் கூறினார்.
அமலாக்க நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையானது, தேவையற்ற பலப்பிரயோகம் அல்லது விலங்குகளுக்குத் துன்பம் விளைவிக்கும் செயல்கள் மூலமாக அல்லாமல், தொழில்முறை ஒழுக்கம், நேர்மை மற்றும் கருணையுடன் செயல்படும்போது மட்டுமே நிலைத்து நிற்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஜூலை 29 அன்று போர்ட் கிள்ளானில் உள்ள ‘தாமான் தெலுக் கெடுங் இண்டா’ பகுதியில் நாய்களைப் பிடிக்கும் நடவடிக்கையின் போது, ‘ராக்கி’ என்ற தெருநாய் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
விலங்கு வதை தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணைத் தாளைத் திறந்துள்ளனர்.
ராயல் கிள்ளான் மாநகராட்சி (MBDK) மற்றும் குடியிருப்பாளர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்குப் பிறகு அந்த நாய் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதாகக் தெற்கு கிள்ளான் மாவட்டக் காவல் துறைத் தலைவர் லிம் ஜிட் ஹுய் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
ராக்கியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகச் சிலாங்கூர் கால்நடை பராமரிப்புத் துறை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் வைரலான ஒரு காணொளியில், ஒரு பெண் அந்த நாயை விடுவிக்குமாறு கெஞ்சிக் கொண்டிருக்கும் வேளையில், சிலர் அந்த நாயைக் கட்டி இழுத்துச் செல்வது போன்று பதிவாகியிருந்தது.
கருணையின் முக்கியத்துவம்
தெங்கு பெர்மைசூரி நோராஷிகின், 2015-ஆம் ஆண்டின் விலங்கு நலச் சட்டத்தின் (Animal Welfare Act 2015) கீழ் வழங்கப்படும் தண்டனைகளை மறுபரிசீலனை செய்யுமாறு கூட்டரசு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார். தவறு செய்பவர்களுக்கான தண்டனைகள் பலப்படுத்தப்பட்டு, மேலும் உறுதியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றார்.
விலங்குகளைப் பாதுகாத்தல், மீட்டல், சிகிச்சை அளித்தல் மற்றும் பராமரித்தல் போன்ற மனிதநேய நடவடிக்கைகளை மேம்படுத்த அரசாங்கம், உள்ளாட்சி மன்றங்கள், விலங்கு நல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“நாம் விலங்குகளை நடத்தும் விதம், மனிதர்களாகிய நாம் யார் என்பதைப் பிரதிபலிக்கிறது. மிகவும் பலவீனமான உயிரினங்களிடம் கருணை காட்டத் தவறும் ஒரு சமுதாயம், காலப்போக்கில் சக மனிதர்களிடம் காட்டும் கருணையையும் இழந்துவிடும்”.
“கருணை என்பது பலவீனம் அல்ல; மாறாக, மிகவும் பலவீனமான உயிரினங்களைப் பாதுகாக்கும் திறனே ஒரு சமுதாயத்தின் பலம், முதிர்ச்சி மற்றும் நாகரிகத்தின் உண்மையான அளவுகோலாகும்,” என்று அவர் நினைவூட்டினார்.
























