அம்னோவுக்கு நஜிப் விவகாரம் இன்னமும் ஒரு பகடைகாயா?

இராகவன் கருப்பையா- தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வாக்கு சேகரிப்பதற்கு முன்னாள் பிரதமர் நஜிபின் விவகாரத்தை ஒரு பகடைகாயாக அம்னோ பயன்படுத்த முனைவதை வேடிக்கை என்பதா அறிவிலித்தனம் என்று சொல்வதா தெரியவில்லை. அல்லது ஊழல் வழிமுறைதான் அம்னோ அரசியல் என்பதா?

அண்மைய காலமாக திடீர் உத்வேகம் பிறந்ததைப் போல அளவுக்கு மீறிய அகங்காரத்துடன் அம்னோ தலைவர்கள் நடந்து கொள்வது யாரும் எதிர்பாராத ஒன்றுதான்.

ஆனால் ‘கூட இருந்தே குழி பறிப்பதைப் போல’ பிரதமர் அன்வாருக்கே அவர்கள் சவால்விட்டுக் கொண்டிருப்பது தற்போது பல்வேறு தரப்பினரிடையே சர்ச்சையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நடந்து முடிந்த ஜொகூர் மாநிலத் தேர்தளின் போது நஜிபின் புதல்வர் நஸிஃபுடின் வெளியிட்டக் கருத்து அன்வார் உள்பட பலருக்கு எரிச்சலூட்டியது என்றே சொல்ல வேண்டும்.

ஜொகூரில் தேசிய முன்னணி மகத்தான வெற்றி பெற்றால் தனது தந்தை அரச மன்னிப்புப் பெறுவதற்கும் விடுதலையாவதற்கும் பொது மக்கள் ஆதரவளிக்கின்றனர் என்பதைக் குறிக்கும் என்று அவர் குறிப்பிட்டது முற்றிலும் அறிவிலித்தனமான ஒரு கருத்து.

நஜிப் விடுதலையாவதை மக்கள் விரும்புகிறார்கள் என்று யார் சொன்னது? சுயமாகப் பிதற்றிக் கொண்டு மக்கள் மீது இவர் பலி சுமத்துகிறார். நஜிப் மீது மக்கள் எவ்வளவு கோபமாக இருக்கிறார்கள் என்று இவருக்குத் தெரியாதோ!

‘உலக மகாத்திருடன்’ என அமெரிக்கா உள்பட சர்வதேச நிலையில் பல நாடுகள் நஜிப் மீது முத்திரை குத்தியுள்ளது எல்லாரும் அறிந்த ஒன்று.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் நம் நாட்டில்  எல்லா நிலைகளில் உள்ள நீதிமன்றங்களும் நஜிப் குற்றவாளிதான் என தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் அவர் அரச மன்னிப்புக் கோரியதைத் தொடர்ந்து தண்டனை குறைக்கப்பட்டதும் எல்லாருக்கும் தெரியும்.

அவர் திருடிய பணம் கொஞ்ச நஞ்சமில்லை. அதன் மதிப்பு ரிம 2,300,000,000 -க்கும் அதிகமாகும். அந்தக் இழப்பை அடைக்க நம் அரசாங்கம் எடுக்கும் வழிமுறைகள் குடிமக்கள் அனைவரையும் பாதிக்கும்.

நிலைமை இப்படி இருக்கையில், தன்னைத்தானே அவமனப்படுத்திக் கொண்டு, குடும்பத்தை அவமானப்படுத்தி, நாட்டையும் அவமானப்படுத்தியது மட்டுமின்றி அதன் பொருளாதாரத்தையும் நிலைகுலையச் செய்த ஒருவருக்கு, கொஞ்சமும் சங்கோஜமில்லாமல் ‘விடுதலை வேண்டும்,’ என வீண் விதண்டாவாதம் செய்வதை என்னவென்று சொல்வது?

பேரரசர் தனது கடமையை நிறைவாகச் செய்து விட்டார். இன்னும் என்ன அரச மன்னிப்பு வேண்டும் என மக்களை இவர்கள் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இவ்விவகாரத்தில்  அன்வாரும் கூட இம்முறை சற்று கோபமடைந்துள்ளதைப் போல் தெரிகிறது. “அவர் சிறையில் இருக்கிறார். அவரை விட்டு விடுங்கள். அவருடைய விடுதலையைப் பற்றியே பேசிக் கொண்டிருக்காமல் மக்கள் நலன் மீதும் நாட்டின் பொருளாதாரம் மீதும் கவனம் செலுத்துங்கள்,” என அன்வார் சற்று காட்டமாகக் குறிப்பிட்டதில் நியாயம் உள்ளது.

“சுமார் 51 பில்லியன் ரிங்கிட் கடனை அடைப்பது அரசாங்கத்திற்கு பெரும் சுமையாக உள்ளது. அந்தப் பணம் இருந்தால் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் மற்றும் சாலைகளை நிர்மாணிப்பதற்கும் ஏழைகளுக்கு உதவுவதற்கும் பயன்படுத்த முடியும்,” என்று குற்பிட்ட பிரதமரின் ஆதங்கம் நமக்கு புரிகிறது.

அம்னோ, காலங்காலமாக ஊழலுக்கு பெயர் பெற்ற ஒரு கட்சி என பரவலாக பேசப்படும் ஒரு கருத்தாகும். இந்நிலையில், அன்வாரின் கடுமையானச் சாடலுக்குப் பிறகும் ரஜிப்பின் விடுதலையைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருந்தால் வாக்காளர்கள்தான் அக்கட்சிக்கு சரியானப் பாடம் புகட்ட வேண்டும்.