பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பி.கே.ஆர் தலைவர்கள் பெர்சத்து கட்சியுடன் ஒத்துழைப்பது குறித்த சாத்தியக்கூறுகள் பற்றி இன்னும் விவாதிக்கவில்லை என்று பக்காத்தான் ஹராப்பான் தகவல் தொடர்பு இயக்குனர் பாமி பட்சில் தெரிவித்துள்ளார்.
பாஸ் கட்சியுடன் ஏற்பட்ட மோதலுக்கு மத்தியில், பெர்சத்துவுடன் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் திறந்த மனதுடன் இருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை செய்திகள் வெளியாகியிருந்தன.
இங்கு இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய பிகேஆர் தகவல் பிரிவின் தலைவருமான பாமி, இந்த விஷயம் குறித்து பக்காத்தான் அல்லது பிகேஆர் கூட்டங்களில் விவாதிக்கப்படவில்லை என்று கூறினார்.
இப்பொழுதைக்கு, தலைமைத்துவம் இந்த விஷயம் (பெர்சத்துவுடனான ஒத்துழைப்பு) குறித்து விவாதிக்கவில்லை, என்று தேசியத் தினம் மற்றும் மலேசியத் தினம் (HKHM) 2026 நிதியுதவி வழங்கும் விழாவிற்குப் பிறகு செய்தித் தொடர்பு அமைச்சர் தெரிவித்தார்.
அரசியல் ஸ்திரத்தன்மைக்காக பெரிக்காத்தான் அல்லது பெர்சத்து கட்சியுடனான ஒத்துழைப்பிற்கான கதவுகளை பக்காத்தான் இன்னும் மூடிவிடவில்லை என்று பிகேஆர் கட்சியின் துணைத் தலைவரும், சிலாங்கூர் மாநில பக்காத்தான் தலைவருமான அமிருதின் ஷாரி கடந்த திங்கட்கிழமை தெரிவித்தார்.
இந்த அறிக்கையைத் தொடர்ந்து, இதுபோன்ற ஒத்துழைப்பு குறித்து பக்காத்தான் ஹராப்பான் அதிபர் கவுன்சில் விவாதித்ததா அல்லது ஏதேனும் முடிவு எடுத்ததா என்று ஜசெக துணைப் பொதுச் செயலாளர் ராம்கர்பால் சிங் கேள்வி எழுப்பினார்.
மேலும், இதுபோன்ற கூட்டணிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஜசெக ஒருபோதும் விவாதித்ததில்லை என்றும் ராம்கர்பால் கூறினார்.
முன்னாள் பக்காத்தான் உறுப்புக் கட்சியான பெர்சத்து, பாஸ் கட்சியுடன் மோதல் ஏற்பட்ட போதிலும், இன்னும் பெரிக்காத்தான் கூட்டணியின் ஒரு அங்கமாகவே நீடிக்கிறது.
-fmt
























