விமான நிலையப் பாதுகாப்புத் திட்ட வரைவு அடுத்த வாரம் அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல்

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டின் கீழ் மலேசிய விமானி ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மலேசிய விமான நிலையங்களில் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மேம்படுத்துவதற்கான திட்டம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

கடந்த வார அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டதாகவும், விமான நிலையப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து ஒழுங்குமுறை முகமைகளுக்கும் அதில் உத்தரவிடப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதில் உள்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சகங்கள், எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமை, விமானப் போக்குவரத்து பாதுகாப்பு, மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAM) மற்றும் மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் ஆகிய முகமைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று இந்த முகமைகள் ஆலோசனை நடத்தின. விமான நிலையப் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மேம்படுத்துவதற்கான திட்ட வரைவு அறிக்கை, அடுத்த வாரம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நான் அறிந்துகொண்டேன், என்று கடந்த வாரம் சபா, போஃபோர்ட் பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகக் கருதப்படும் காவல்துறை அதிகாரி முகமது நூர் ஹஃபிஸ் ரஹீமின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் சைஃபுடின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஸ்கேனிங் இயந்திரங்களின் கட்டுப்பாடு மற்றும் செயல்பாடு உட்பட ஒருங்கிணைப்பு, பயிற்சி, உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்கள் ஆகிய அம்சங்களை இந்தத் திட்டம் உள்ளடக்கும் என்று சைஃபுடின் கூறினார்.

குண்டுகள், கூர்மையான ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகளைக் கண்டறிவதை மையமாகக் கொண்டு, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பினால்  நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளின்படி, விமானப் போக்குவரத்து பாதுகாப்பு குழுக்களால் விமான நிலைய ஸ்கேனிங் இயந்திரங்கள் இயக்கப்படுவதாக அவர் கூறினார்.

தடைசெய்யப்பட்ட பொருட்கள் திரையில் தோன்றினால், அதை ஸ்கேனிங் இயந்திரம் மூலம் நிச்சயமாகக் கண்டறிய முடியும். இருப்பினும், இந்தச் சோதனை நடைமுறைகள் காவல்துறை அல்லது எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமை மேற்கொள்ளும் வழக்கமான பாதுகாப்பு சோதனைகளின் கீழ் வராததால், நாம் இந்த நடைமுறைகளை மறுசீரமைக்க வேண்டும், என்று அவர் கூறினார்.

பிரதமர் அன்வார் இப்ராஹிம் இந்த விஷயத்தை மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிமின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாகவும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் விமான நிலையப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பேரரசர் வலியுறுத்தியுள்ளதாகவும் சைஃபுடின் தெரிவித்தார்.

இந்த விவகாரம் பாதுகாப்பு தொடர்பானது மட்டுமல்லாமல், மலேசியாவின் நற்பெயர் சார்ந்ததும் ஆகும் என்றும், குறிப்பாக நாடு வலுவான சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ள வேளையில் இது முக்கியத்துவம் பெறுகிறது என்றும் அவர் கூறினார்.

மலேசியாவைச் சேர்ந்த 39 வயது விமானி ஒருவர், கடந்த ஜூலை 29 அன்று 25 கிலோ போதைப்பொருளைக் கடத்த முயன்றதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில், சோகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 3-ல் இந்தோனேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

 

 

 

-fmt