10 ஆண்டுகளுக்கும் மேலான செல்லுபடியாகும் காலத்தைக் கொண்ட மலேசிய சர்வதேச கடவுச்சீட்டுகளின் செல்லுபடித்தன்மையை குடிவரவுத் துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த விவகாரம் விமான நிறுவனங்கள் மற்றும் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO) ஆகியவற்றுடன் தீர்க்கப்படும் வரை இந்த நடவடிக்கை தொடரும்.
பாதிக்கப்பட்ட கடவுச்சீட்டுகளை (Passports) வைத்திருப்பவர்களுக்கு கடவுச்சீட்டை மாற்றுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என்று குடிவரவு துறை தலைமை இயக்குநர் ஜக்காரியா ஷாபான் தெரிவித்தார். மேலும், வெளிநாடுகளில் இருக்கும் பாதிக்கப்பட்ட மலேசியப் பயணிகளுக்கு உதவுவதற்காக அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அறிவிப்பு கடிதங்கள் வழங்கப்படும்.
10 ஆண்டுகளுக்கு மேலான செல்லுபடியாகும் காலத்தைக் கொண்ட கடவுச்சீட்டு உரிமையாளர்கள், வெளிநாடுகளில் உள்ள சில விமான நிறுவனங்களின் ‘செக்-இன்’ (check-in) நடைமுறைகளின் போது சிக்கல்களை எதிர்நோக்கிய பல சம்பவங்களைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜகாரியா தெரிவித்தார்.
இந்தக் குழப்பத்திற்குத் தீர்வு காணும் வகையில், ஒரு கடவுச்சீட்டின் அதிகபட்ச செல்லுபடியாகும் காலம் 10 ஆண்டுகள் மட்டுமே என குடிவரவுத் துறை விதிமுறை வகுத்துள்ளது.
“கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலத்தை சீரமைக்கவும், கூடுதல் ஆறு மாத செல்லுபடியாகும் காலம் குறித்த தேவையில் சில விமான நிறுவனங்களிடையே ஏற்படும் மாறுபட்ட புரிதல்களையும் குழப்பங்களையும் தவிர்க்கவுமே இந்த விதிமுறை அமைக்கப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
10 ஆண்டு புதுப்பித்தல் தேர்வின் கீழ், பழைய கடவுச்சீட்டின் மீதமுள்ள செல்லுபடியாகும் காலம் (அதிகபட்சமாக ஆறு மாதங்கள் வரை) புதிய கடவுச்சீட்டிற்கு இனி முன்னோக்கி கொண்டு செல்லப்படாது (carry forward) என்றும் ஜகாரியா விளக்கினார்.
அதாவது, 10 ஆண்டு புதுப்பித்தலைத் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களுக்கு சரியாக 10 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் காலத்தைக் கொண்ட கடவுச்சீட்டு வழங்கப்படும்.
“உதாரணத்திற்கு, ஒருவர் தனது கடவுச்சீட்டில் ஆறு மாதங்கள் மீதமிருக்கும் போதே அதனைப் புதுப்பித்தால், அந்த மீதமுள்ள காலம் புதிய கடவுச்சீட்டில் சேர்க்கப்படாது,” என்று அவர் கூறினார்.
ஐந்தாண்டு கடவுச்சீட்டிற்குப் பொருந்தாது
இருப்பினும், ஐந்து ஆண்டு கடவுச்சீட்டு புதுப்பித்தலுக்கு, பழைய கடவுச்சீட்டின் மீதமுள்ள காலம் (அதிகபட்சமாக ஆறு மாதங்கள் வரை) இன்னும் முன்னோக்கி கொண்டு செல்லப்படலாம் என்று ஜகாரியா கூறினார்.
“ஐந்து ஆண்டுகளுக்குப் புதுப்பிப்பவர்களுக்கு, மீதமுள்ள ஆறு மாதங்கள் வரையிலான காலம் கணக்கில் கொள்ளப்படும்; இதனால் புதிய கடவுச்சீட்டின் செல்லுபடியாகும் காலம் ஐந்து ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்களாக இருக்கும்,” என்று கூறிய அவர், ஜூலை மாதம் முதல் 10 ஆண்டுகளுக்கு மேலான செல்லுபடியாகும் காலத்தைக் கொண்ட 26,000 கடவுச்சீட்டுகள் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
10 ஆண்டுகளுக்கு மேல் செல்லுபடியாகும் காலத்தைக் கொண்ட கடவுச்சீட்டு உரிமையாளர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்போது சந்தித்த சிரமங்கள் குறித்த சமூக ஊடகப் பதிவுகளைத் துறை கவனத்தில் கொண்டுள்ளதாக ஜகாரியா தெரிவித்தார்.
இவ்விவகாரம் ICAO-வின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், 10 ஆண்டுகளுக்கு மேல் செல்லுபடியாகும் காலத்தைக் கொண்ட கடவுச்சீட்டுகளை அமல்படுத்துவதற்குத் தடை ஏதும் இல்லை என்றே அவர்களிடம் இருந்து பதிலளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“இருப்பினும், 10 ஆண்டுகளுக்கு மேலான கடவுச்சீட்டைக் கொண்ட சிலர் வெளிநாட்டு விமான நிறுவனங்களில் ‘செக்-இன்’ செய்யும்போது சிக்கல்களைச் சந்தித்ததால் இந்தக் குழப்பம் ஏற்பட்டது,” என்றார் அவர்.
தொடர் மேம்பாடு
மலேசியர்களுக்கு வசதி ஏற்படுத்தித் தருவதற்கும், சர்வதேசப் பயணங்கள் மிகவும் சுமூகமாகவும் சீராகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்கும் கடவுச்சீட்டு அமலாக்கத்தை தொடர்ந்து மேம்படுத்த தனது குழு உறுதியளித்துள்ளதாக ஜகாரியா கூறினார்.
சமீபத்தில், மலேசியப் பயணி ஒருவர் தனது கடவுச்சீட்டின் செல்லுபடியாகும் காலம் 10 ஆண்டுகளுக்கு மேல் இருந்ததால், சில வெளிநாட்டு விமான நிலையங்கள் வழியாகப் பயணம் செய்யும்போது சிரமங்களைச் சந்தித்ததாக சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது.
‘திரெட்ஸ்’ (Threads) தளத்தில் மீசா (Miza) எனப்படும் அந்தப் பெண், துபாய், ஜோகன்னஸ்பர்க் மற்றும் விண்ட்ஹோக் ஆகிய இடங்களில் தாம் சிக்கல்களைச் சந்தித்ததாகக் குறிப்பிட்டிருந்தார். அதிகார அமைப்புகள் அல்லது விமான நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் அமைப்புகள் (systems), 10 ஆண்டுகளுக்கு மேலான செல்லுபடியாகும் காலம் கொண்ட கடவுச்சீட்டுகளை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை என அவர் கூறியிருந்தார்.
குடிவரவுத் துறை ஜூலை 1 முதல் 10 ஆண்டுகள் வரையிலான செல்லுபடியாகும் காலத்தைக் கொண்ட புதிய கட்டமைக்கப்பட்ட கடவுச்சீட்டுகளை அறிமுகப்படுத்தியது.
கடவுச்சீட்டு புதுப்பிக்கும் இடைவெளியைக் குறைக்கவும், பயனர்களின் நேரத்தைச் சேமிக்கவும், உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பயணங்களை எளிதாக்கவும் இது நோக்கமாகக் கொண்டிருந்தது.
10 ஆண்டுகள் செல்லுபடியாகும் காலத்தைக் கொண்ட கடவுச்சீட்டுக்கான கட்டணம் ரிம 350 ஆகும்; அதே வேளையில் ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் ஆவணத்திற்கான கட்டணம் ரிம 200 ஆக மாறாமல் உள்ளது.
























