கோலாலம்பூரில் சிறுவர் ஊட்டச்சத்து குறைபாடு ஒரு வளர்ந்து வரும் நெருக்கடி: சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

கோலாலம்பூரில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு கவலை அளிக்கும் வகையில் உள்ளதாகவும், கூட்டாட்சிப் பிரதேசத்தில் 23.4% குழந்தைகள் வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய ஆய்வு ஒன்று காட்டுவதாகவும் சுகாதார அமைச்சர் தசுல்கிப்லி அகமத் தெரிவித்துள்ளார்.

அங்குள்ள குழந்தைகளில் 12.4% பேர் குறைந்த எடையுடனும், 8% பேர் உடல் மெலிவாலும் (வயதுக்கேற்ற எடையின்மை), மற்றும் 7.5% பேர் அதிக எடையுடனும் இருப்பதை அந்த ஆய்வு காட்டுவதாக அவர் கூறினார்.

செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக் உடன் இணைந்து நகர்ப்புற சமூக உணவுத் திட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய அவர், இந்த எண்கள் வெறும் புள்ளிவிவரங்கள் மட்டுமல்ல. ஒவ்வொரு சதவீதத்திற்குப் பின்னாலும், ஒரு முக்கியமான வளர்ச்சிப் படியில் இருக்கும் ஒரு குழந்தையும், தங்களுக்குத் தேவையான ஆதரவை எதிர்பார்க்கும் ஒரு குடும்பமும் உள்ளது, என்று கூறினார்.

பாதிக்கப்பட்ட ஒன்று முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு, மாதாந்திர வளர்ச்சி கண்காணிப்பு, சத்தான உணவுக்கூடைகள், மற்றும் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட ஆறு மாத கால ஆதரவு வழங்கப்படுகிறது. இதேபோன்ற திட்டங்கள் லெம்பா பந்தாய் மற்றும் வங்சா மாஜு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நாட்டில் ஒரே நேரத்தில் ஊட்டச்சத்துக் குறைபாடும் அதிக ஊட்டச்சத்தும் இணைந்து காணப்படுவதால், மலேசியா ஊட்டச்சத்து குறைபாட்டின் இரட்டை சுமையை எதிர்கொண்டு வருவதாக தசுல்கிப்லி கூறினார்.

சுகாதார நிலையங்களுக்கு வழக்கமாக வராத, ஊட்டச்சத்து குறைபாட்டு அபாயத்தில் உள்ள குழந்தைகளைக் கண்டறிய, சுகாதார அமைச்சகம் நேரடியாகச் சமூகங்களுக்குச் சென்று தீவிரமான அணுகுமுறையை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

 

 

-fmt