பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் சரவாக், பினாங்கு மாநிலங்கள் மீது கவனம்

அடுத்த ஆண்டு கருவுறுதல் சார்ந்த திட்டங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், இதில் கருத்தரிப்பதில் சிக்கல் எதிர்கொள்ளும் தம்பதிகளுக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகளும் அடங்கும் என்றும் அமைச்சர் நான்சி சுக்ரி தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, மலேசியாவின் கருவுறுதல் விகிதம் 1.6%-ஆகக் குறைந்துள்ளது. 2.1%-க்கும் அதிகமான கருவுறுதல் விகிதம் இருந்தால் மக்கள் தொகை வளர்ச்சியடையும். அதைவிடக் குறைவான விகிதம் இருந்தால், காலப்போக்கில் மக்கள் தொகை குறைந்து, வயதான மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

மலேசியாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்கான அரசின் முயற்சிகளில், பினாங்கு மற்றும் சரவாக் மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் நான்சி சுக்ரி தெரிவித்துள்ளார்.

கருத்தரிப்பதில் சிரமங்களை எதிர்கொள்ளும் தம்பதிகளுக்கு உதவும் நடவடிக்கைகளில் ‘இன்-விட்ரோ கருத்தரித்தல்’ (IVF – செயற்கை கருத்தரிப்பு முறை) முக்கிய பங்கு வகிக்கும் என்றும், அடுத்த ஆண்டு கருவுறுதல் தொடர்பான திட்டங்களுக்கு அமைச்சகம் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் என்றும் *போர்னியோ போஸ்ட்* செய்தி வெளியிட்டுள்ளது.

நான்சி சுக்ரி கூறியதாவது:

நமது நாட்டின் மக்கள் தொகை இன்னும் குறைவாகவே உள்ளது; அதை அதிகரிக்க நாங்கள் விரும்புகிறோம், எனவே கருவுறுதல் சார்ந்த திட்டங்கள் மிக முக்கியமானவை. இதற்காக கருவுறுதல் தொடர்பான திட்டங்களையும் நாங்கள் முன்மொழிந்துள்ளோம்.

பிறப்பு விகிதத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இருப்பதால், முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய மாநிலங்களில் சரவாக் மற்றும் பினாங்கும் அடங்கும் என்று சரவாக், கூச்சிங்கில் நடைபெற்ற மகளிர் தலைமைத்துவ நிகழ்வொன்றைத் தொடங்கி வைத்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கருவுறுதல் திட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளபோதிலும், இளைஞர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டில் இத்திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க அமைச்சகம் உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டடைந்தார். மேலும், அமைச்சகத்தின் வரவு-செலவுத் திட்ட (Budget) சமர்ப்பிப்பில் கருவுறுதல் சார்ந்த திட்டங்களுக்கான முன்மொழிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

மலேசியாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை வகுப்பதற்கு ஆதரவாக, கருவுறுதல் விகிதங்கள் குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

மலேசியாவின் கருவுறுதல் விகிதம் (ஒரு பெண்ணிற்குப் பிறக்கும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை) 1958-இல் 6.28% ஆக இருந்ததிலிருந்து, 2024-இல் 1.6% ஆகக் குறைந்துள்ளது. (மலேசிய புள்ளிவிவரத் துறையின் வரைபடம்)