இராகவன் கருப்பையா- தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்களுக்கு ஜ.செ.க. கட்சியின் இளைஞரணியான ‘டெப்சி'(DAPSY) அன்மையில் ஏற்பாடு செய்திருந்த தீபாவளி விருந்து நிகழ்ச்சி சற்று ஏமாற்றமளிக்கும் ஒரு நிகழ்வாக முடிந்தது.
தலைநகரில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த நிகழ்ச்சியில் தீபாவளி பண்டிகைக்கோ ஊடகவியலாளர்களுக்கோ முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
மாராக தங்களுடைய அரசியல் பிரச்சாரங்களுக்காக அந்நிகழ்ச்சியை அவர்கள் பயன்படுத்திக் கொண்டதைப் போல் தெரிகிறது.
‘டெப்சி’யின் உதவித் தலைவர் ஹரிஷ் லினேஷும் அதன் தலைவர் வூ கா லியோங்கும் உரையாற்றினார்கள். அவ்விருவரின் நோக்கமும் தங்களுடைய கட்சியையும் தங்களையும் விளம்பரப்படுத்திக் கொள்வதில்தான் இருந்ததைப் போல் தெரிகிற்து.
தீபாவளி பண்டிகை தொடர்பான பதாகை ஒன்றைத் தவிர விளக்கு, முருக்கு, பலகாரங்கள் போன்ற எந்த ஒரு துரும்பையும் அங்கு காணவில்லை. இது உண்மையிலேயே தீபாவளி நிகழ்ச்சிதானா, என ஒரு கணம் சிந்திக்கத் தோன்றியது.
இதில் வேடிக்கை என்னவென்றால் ‘டெப்சி’ நிர்வாகக் குழுவில் கணிசமான எண்ணிக்கையில் இந்தியர்களும் இருக்கிறார்கள். அவர்களாவது இவ்விஷயத்தில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.
முன்னாள் பிரதமர் நஜிப், ஊழல் விவகாரங்கள், ம.இ.கா., அதன் துணைத் தலைவர் சரவணன், முதலிய விஷயங்களைப் பற்றிதான் அவ்விருவரும் பேருரையாற்றினார்கள். புதிய விஷயங்கள் எதுவும் இல்லை.
தமிழ் ஊடகவியலாளர்களுக்கு தீபாவளி விருந்தளிக்கும் ஒரு நிகழ்ச்சியில் இத்தகைய விஷயங்கள் முற்றிலும் தேவையில்லாத ஒன்று என்றே நமக்குத் தோன்றுகிறது.
காலங்காலமாக இந்நாட்டில் ஆக்கரமானதொரு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிவந்த ஜ.செ.க. கடந்த ஓரிரு ஆண்டுகளாக சற்று வலுவிழந்து பிரதான ஆதரவை இழந்து வருவது எல்லாரும் அறிந்த ஒன்று.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் அக்கட்சியின் இளைஞரணி துடிப்பானதொரு தலைமைத்துவத்திற்கு அடித்தளமிட்டு அதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.
அதனை விடுத்து, ஊடகவியலாளர்களை அழைத்து தங்களுடைய சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையிலான செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கக் கூடாது.























