கடந்த சனிக்கிழமை சட்டமன்ற உறுப்பினர் வான் படாரியா வான் சாட் காலமானதைத் தொடர்ந்து, பெர்லிஸ் மாநிலத்தின் மாத்தா ஆயர் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் எதுவும் நடத்தப்படாது. தற்போதைய மாநில சட்டமன்றம் முதன்முதலில் கூடி மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பெர்லிஸ் சட்டமன்ற சபாநாயகர் ருஸ்ஸேலே ஐசான் கூறுகையில், 15-ஆவது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடரின் முதல் கூட்டம் 2022 டிசம்பர் 19 அன்று நடைபெற்றது. இதன் பொருள், மூன்று ஆண்டுகால வரம்பு 2025 டிசம்பர் 19 அன்றே முடிவடைந்துவிட்டது என்பதாகும்.
பெர்லிஸ் மாநில சட்டமன்றம் தற்போது 11 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இதில் பாஸ் கட்சியிலிருந்து ஐந்து பேரும், பெர்சத்து (Bersatu) கட்சியிலிருந்து ஐந்து பேரும், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பி்கேஆர் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒருவரும் அடங்குவர். மாநில அரசாங்கம் தொடர்ந்து பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் கீழேயே நீடிக்கிறது.
சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் பெர்லிஸ் மந்திரி பெசார் அபு பக்கர் ஹம்சாவுக்கான தங்களது ஆதரவை வாபஸ் பெறவில்லை. எனவே, அவரது தலைமையின் கீழ் மாநில நிர்வாகம் வழக்கம் போல் தொடர்ந்து இயங்கும்,” என்று அவர் கூறியதாக செய்தி நிறுவனம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த இடவெற்றிடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளதாக ருஸ்ஸேலே தெரிவித்தார்.
15-ஆவது பொதுத் தேர்தலில், பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பாஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட வான் படாரியா (வயது 50), 4,419 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாரிசான் நேஷனல் கூட்டணியின் சித்தி பெரினி யஹாயா 2,398 வாக்குகளையும், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் அம்ரான் காமரூடின் 794 வாக்குகளையும் பெற்றனர்.
அவர் இதற்கு முன்பு முன்னாள் மந்திரி பெசார் சுக்ரி ரம்லியின் தலைமையிலான நிர்வாகத்தில் பெர்லிஸ் மாநில சுற்றுலா, கலாச்சாரம், கலை மற்றும் பாரம்பரியக் குழுவின் தலைவராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-fmt
























