பீஜிங்: வெள்ள நிலைமையை பார்வையிட சென்ற அதிகாரி, தன் செருப்பு நனையக் கூடாது என்பதற்காக, விவசாயி மீது சவாரி செய்ததால், அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சீனாவின், ஜேஜியாங் மாகாணத்தில, இம்மாத துவக்கத்தில் ஏற்பட்ட புயல், மழையால், 10 பேர் உயிரிழந்தனர்; 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்; ஏராளமான வீடுகள் இடிந்தன; தானியங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவும், வெள்ளச் சேதங்களை கணக்கிடவும், சாங்க்ஷி நகர நிர்மான அலுவலகத்தின் இயக்குனரான, வாங்க் என்பவர், சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
அவர், விலையுயர்ந்த ஆடைகள் மற்றும் செருப்பை அணிந்திருந்தார். வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு செல்ல, ஆற்றை கடக்க வேண்டியிருந்தது. செருப்பும், உடையும் நனையக் கூடாது என்பதற்காக, அப்பகுதி விவசாயி மீது ஏறி ஆற்றைக் கடந்து சென்று, வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, மீண்டும் அவ்வாறே, திரும்பி வந்தார்.
இந்த செய்தி, படத்துடன், இணையதளத்தில் வெளியானதால், பெரும் சர்ச்சை ஏற்பட்டது. விவசாயி மீது ஏறிச் சென்றதற்காக, அந்த அதிகாரியை பதவியில் இருந்து நீக்கி, அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.