மாலத்தீவு அதிபரைத் தேர்ந்தெடுக்க சனிக்கிழமை நடைபெறவிருந்த மறுதேர்தலை கடைசி நேரத்தில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் மாலத்தீவு அரசியலில் ஸ்திரத்தன்மையற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மறுதேர்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில், “தேர்தல் அலுவலகத்துக்குள் போலீஸார் நுழைந்து தேர்தல் தொடர்பான பொருள்களை விநியோகிப்பதை தடுத்து நிறுத்திவிட்டனர். இதனால் தேர்தல் நிறுத்தப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கை குறித்து விளக்கமளித்துள்ள போலீஸ் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா நவாஸ், “உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை. இது குறித்து அதிபர் வாஹித், பாதுகாப்பு கவுன்சில், உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என்று தெரிவித்தார்.
போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையர் ஃபுவாட் தௌஃபிக், “இது ஜனநாயகத்தின் கருப்பு தினம்.
தேர்தல் எப்போது நடைபெற வேண்டும் என்பதை போலீஸார் முடிவு செய்ய முடியாது’ என்று கூறினார்.
“இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகத்தினர் தலையிட வேண்டும்’ என்று மாலத்தீவு ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே, “அக்டோபர் 26 ஆம் தேதிக்குள் அதிபர் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தல் ஆணையம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பதவி முடிந்து வெளியேறவுள்ள அதிபர் முகமது வாஹித் வலியுறுத்தியுள்ளார்.
மாலத்தீவு அதிபராக இருந்த நஷீத் கடந்த ஆண்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து அங்கு தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டு வருகிறது.