அமெரிக்க பொதுக் கடன் மதிப்பு ரூ.1,041 லட்சம் கோடியாக உயர்வு

dollarகடன் உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டதை அடுத்து, அமெரிக்காவின் பொதுக் கடன் மதிப்பு ரூ.1,041 லட்சம் கோடி உயர்ந்துள்ளதாக அந்நாட்டு நிதித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க நிதித்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் கடன் உச்சவரம்பை அதிகரிக்க புதன்கிழமை ஒப்புதல் கிடைத்தது. இதையடுத்து அமெரிக்காவின் பொதுக் கடன் மதிப்பு 17 டிரில்லியன் அமெரிக்க டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,041 லட்சம் கோடி)உயர்ந்துள்ளது.

இதன்மூலம் அரசுத் துறைகளுக்கு தேவையான நிதியை அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ள முடியும். அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்தில், அமெரிக்காவின் கடன் மதிப்பில் இதுவரை 6.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 390 லட்சம் கோடி) கூடுதலாக சேர்ந்துள்ளது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க குடியரசுக் கட்சியின் செனட் உறுப்பினர் டெட் குரூஸ் தன் டுவிட்டர் பதிவில்,

“அமெரிக்க நாட்டின் வரலாற்றிலேயே முதல்முறையாக பொதுக் கடன் மதிப்பு 17 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளதை ஏற்றுக்கொள்ளவே முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.