விஷத்தன்மை வாய்ந்த குண்டு தயாரிப்பு: பாகிஸ்தான் தலிபான்களின் கொடூரம் அம்பலம்

Taliban-Fighters1பாகிஸ்தான் தலிபான் பயங்கரவாத அமைப்பினர் மிகவும் விஷத்தன்மை வாய்ந்த ரசாயனங்களைப் பயன்படுத்தி வெடிகுண்டுகளைத் தயாரிப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

பாகிஸ்தானில் செயல்படும் தலிபான் பயங்கரவாதிகள் நடத்தும் குண்டு வெடிப்பில் காயமடையும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் கூறுகையில், “”வெடிகுண்டுகளில் விஷத்தன்மை வாய்ந்த ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டதால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது” என்று தெரிவித்தனர்.

தலிபான்களின் தாக்குதலில் காயமடையும் நபர்களுக்கு நாள்பட்ட காயம் ஏற்படுவதாகவும் அவர்களுக்கு தோல் மீது கட்டிகள் உருவாவதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர். அறுவை சிகிச்சைக்குப் பின் காயங்களை ஆற்ற பயன்படுத்தக் கூடிய மருந்துகளாலும் இந்தக் காயங்களை ஆற்ற முடிவதில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தானின் “டான்’ பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “”தாங்கள் நடத்தும் தாக்குதல்களில் வழக்கமாக ஏற்படும் உயிரிழப்புகளைத் தாண்டிய பாதிப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் தலிபான்கள் அதிக விஷத்தன்மை வாய்ந்த குண்டுகளைத் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்று விட்டனர். அவர்கள் வெடிகுண்டுகளில் கந்தகத்தைப் பயன்படுத்துகின்றனர். அவை மனித உடல் செல்களை அழிக்கக் கூடியவையாகும்” என்று குறிப்பிட்டனர்.

தலிபான்கள் உருவாக்கிய குண்டுகள் கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டையாக்சைடு வாயுக்களை வெளியிடுகின்றன. இவை காயமடையும் நபர்களின் பிராண வாயு உறிஞ்சும் தன்மையைச் சிதைக்கின்றன. குண்டு வெடித்ததும் அதில் இருந்து வெளியேறும் புகையானது காயமடையும் நபர்களின் உடலுக்குள் ஊடுருவி, பிராண வாயுவை உறிஞ்சும் தன்மையைச் சிதைப்பதால் அவர்கள் கோமா நிலையை அடைந்து உயிரிழந்து விடுவார்கள்.

தலிபான்கள் பயன்படுத்தும் இவ்வகை வெடிகுண்டுகள் வெள்ளை அல்லது மஞ்சள் நிறமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.