ஒட்டுக்கேட்பு விவகாரம்: ஆஸிக்கான தூதரை திரும்ப அழைத்தது இந்தோனேஷியா

susilo_bambangஆஸ்திரேலியாவுக்கான தமது நாட்டுத் தூதரை இந்தோனேஷியா திருப்பி அழைத்துள்ளது.

இந்தோனேஷிய அதிபர் சுசிலோ பாம்பாங் யுதோயோனோவின் தொலைபேசி உரையாடல்களை ஆஸ்திரேலிய புலனாய்வு அமைப்புகள் ஒட்டுக் கேட்டன எனும் குற்றச்சாட்டின் பேரிலேயே தமது தூதரை திருப்பி அழைக்கும் நடவடிக்கையை இந்தோனேஷியா எடுத்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க வருமாறு தமது நாட்டுக்கான ஆஸ்திரேலியத் தூதருக்கு இந்தோனேஷியா அழைப்பாணை அனுப்பியுள்ளது.

அமெரிக்க புலனாய்வுத் துறையின் முன்னாள் ஒப்பந்ததாரான எட்வர்ட் ஸ்நோடனால் கசியவிடப்பட்ட ஆவணங்கள் 2009 ஆம் ஆண்டு யுதோயோனா மற்றும் அவரது நெருங்கிய வட்டாரங்களில் உள்ளவர்களின் உரையாடல்கள் ஒட்டுகேட்டப்பட்டதாக கூறுகின்றன.

இந்த ஆவணங்கள் பிரிட்டனின் கார்டியன் பத்திரிகை மற்றும் ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனத்துக்கு கிடைத்துள்ளன.

இதனிடையே ஊடகங்களில் வந்த செய்திகள் குறித்து தான் கருத்துக்களை வெளியிட முடியாது என்று ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். -BBC