எதிர்க்கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், வங்கதேசத்தில் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல்களில் வாக்குப்பதிவு இன்று கடும் வன்முறைகளுக்கிடையே நடந்து வருகிறது.
எதிர்க்கட்சித் தொண்டர்களுக்கும் போலிசாருக்கும் இடையே நடந்த மோதல்களில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னரும் பல நாட்களாக நடந்த வன்செயல்களில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல்கள் நடக்கும்போது ஆட்சியில் இருக்கும் அரசு பதவி விலகி, பக்கசார்பற்ற காபந்து அரசு ஒன்றின் கீழ் தேர்தல்கள் நடத்தப்படும் வழக்கத்தை , தற்போது ஆளும் அவாமி லீக் அரசு மாற்றியதைக் கண்டித்து, எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியக் கட்சியினர் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.
( இந்தக் காபந்து அரசின் கீழ் தேர்தல்களை நடத்தும் முறையை, 2010ல் நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்டத் திருத்தம் ஒன்றின் மூலம், ஷேக் ஹசினா அரசு ரத்து செய்தது. தற்போதைய தேர்தல்கள் புதிய அரசியல் சட்ட அமைப்பின் விதிகளின்படியே நடக்கவேண்டும் , எந்த ஒரு மாற்றம் குறித்தும் , தேர்தலுக்குப் பின்னர் விவாதிக்கலாம் என்று ஷேக் ஹசினா அரசு கூறுகிறது.)
பாதிக்கு மேலான தொகுதிகளில் போட்டி இல்லை
நாடாளுமன்றத் தொகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் எதிர்க்கட்சியினர் யாரும் போட்டியிடாததால், ஆளும் கட்சியின் வேட்பாளர்களே வெற்றி பெற்றதாக முன் கூட்டியே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கவில்லை.
உள்ளுர் நேரப்படி காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடக்கிறது.
எதிர்க்கட்சியான, பங்களாதேஷ் தேசியக் கட்சி, சனிக்கிழமையிலிருந்து இரண்டு நாள் வேலை நிறுத்தத்துக்குக் குரல் கொடுத்திருக்கிறது. தேர்தல்களை ஒரு ” மோசடியான கேலிக்கூத்து” என்று எதிர்க்கட்சித் தலைவி கலீதா ஸியா வர்ணித்தார்.
தான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதை அரசு மறுக்கிறது.
கடுமையான அரசியல் விரோதிகளான ஷேக் ஹசினாவும், கலீதா ஸியாவும், வங்கதேசத்தில் ஆட்சி அதிகாரத்தில், கடந்த இரு தசாப்தங்களாகவே மாறி மாறி இருந்து வருகின்றனர். -BBC