இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்த யுத்தத்தின் இறுதிப் பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேசச் சட்டமீறல்கள் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, சுயாதீனமான மற்றும் நம்பகமான விசாரணை தேவை என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கான தமது பயணத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீஃபன் ஜே ரப், தனது விஜயத்தின் முடிவில் வெளியிட்ட அறிக்கையிலேயே இதைத் தெரிவித்துள்ளார்.
நம்பகத்தன்மையுடன் கூடிய சுயாதீனமான விசாரணைகள் மூலமே உண்மையைக் கண்டறிய முடியும் எனவும், தேவையேற்படும் சந்தர்ப்பத்தில் குற்றமிழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் இலங்கை அரசை அமெரிக்கா ஊக்குவிக்கிறது எனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இலங்கையில் அனைத்து மக்களும் சுபீட்சம் மற்றும் சமாதானத்துடன் வாழ இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றுவதற்கு அமெரிக்கா தொடர்ந்து அர்ப்பணிப்புடன் உள்ளது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இறுதிப் போரின்போது இடம்பெற்ற சம்பவங்கள், அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பாக அனைத்து தரப்பினரும் இணக்கப்பாட்டுக்கு வருவது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்படியான ஒரு நடவடிக்கையின் மூலமே இலங்கை ஜனநாயகத்தின் ஆட்சியை நிலைநிறுத்த முடியும் எனவும், ஒன்றிணைந்த ஒரு நாடாக இலங்கை முன்னேறிச் செல்வதும் மிகவும் முக்கியமானது எனவும் அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீஃபன் ஜே ரப் கூறியுள்ளார். -BBC