சிரியாவுக்கு செல்லும் முஸ்லிம் இளைஞர்கள் பிரிட்டனில் வந்து தாக்குதல் நடத்தக்கூடும் என அதிகாரி ஒருவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
சிரியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
இதில் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் பலியானதுடன், மில்லியன் கணக்கானவர்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் சிரியாவில் போராடுவதற்காக பிரிட்டனிலிருந்து செல்லும் முஸ்லிம் இளைஞர்கள் மீண்டும் நாடு திரும்பியதும், பிரிட்டனிலும் தாக்குதல்களை நடத்த முயற்சிக்கக் கூடும் என்று முன்னணி பிரிட்டிஷ் முஸ்லிம் விவகார அவதானி மொஹமட் அன்சார் கூறியுள்ளார்.
கடுமையான வன்முறைகளுக்கு பழகிப் போனவர்களை மீண்டும் பிரிட்டிஷ் சமூகத்தில் இணைப்பது என்பது மிகக்கடினமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
தீவிரவாத குற்றங்களுடன் தொடர்புடைய நபர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அன்சாரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே சிரியாவில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவி செய்வதற்காக பணத்தை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில் கடந்த வாரத்தில் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சிரியாவிலிருந்து பிரிட்டன் திரும்பும் நபர்களை எல்லையில் வைத்து விசாரித்து கைது செய்யப்படுவார்கள் என மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.