பாகிஸ்தானில் தெஹ்ரிக்- இ- தலிபான் இயக்கத்தை சேர்ந்த மூத்த கமாண்டர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதுகுறித்து இராணுவ அதிகாரிகள் கூறுகையில், தெஹ்ரிக்- இ- தலிபான் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய நிர்வாகியான அஸ்மதுல்லா ஷாஹீன் பிட்டானி மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் ஒரு வாகனத்தில் வஜிரிஸ்தானின் தர்கா மாண்டி பகுதியில் திங்கள்கிழமை(நேற்று) சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்தப் பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் அவர்களின் வாகனம் மீது துப்பாக்கியால் சுட்டு விட்டு, தப்பி ஓடி விட்டனர்.
இந்தத் தாக்குதலில் அஸ்மதுல்லா ஷாஹீன் பிட்டானி உள்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், இறந்த மற்ற 3 பேர் அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
வடக்கு வஜிரிஸ்தான், பழங்குடியினர் கட்டுப்பாட்டில் உள்ள 7 பிராந்தியங்களில் ஒன்றாகும்.
இங்கு தலிபான்கள் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.
மேலும் மர்ம நபர்கள் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.