அமெரிக்கா பின்வாங்கியது ஏன்?

usa_indian flagஇலங்கையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் போரின் இறுதியில் நடந்த போர்க்குற்றங்களுக்கு சர்வதேச சமூகத்தினால் நீதி வழங்கப்படுமா? என்ற கேள்வி இப்போது பலரிடம் மீண்டும் எழத் தொடங்கியுள்ளது.

கடந்த வாரம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பொன்றில் பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் போரில் குற்றங்களை இழைத்தவர்களைத் தண்டிப்பதில் சர்வதேச சமூகம் அக்கறை காட்டவில்லை. அதற்குப் பதிலாக, ஆட்சி மாற்றத்தின் மீதே சமூகம் கவனம் செலுத்துவதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்தக் கருத்து அவரிடமிருந்து வெளியானதற்குக் காரணம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகளின் தீர்மான வரைபு சர்வதேச விசாரணைப் பொறிமுறையை அமைக்க கோரும் வகையில் இருக்காததேயாகும்.

சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றின் மூலம் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக இருந்தது.

அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தீர்மான வரைபு அமையவில்லை என்றதும், மேற்கு நாடுகள் ஏமாற்றி விட்டதான உணர்வும், கருத்துகளும் வெளிப்பட்டிருக்கின்றன. பொறுப்“புக்கூறல் தொடர்பாக இலங்கை அரசாங்கம் இதுவரை தனது கடப்பாட்டை நிறைவேற்றவில்லை. இனியும் அதைச் செய்யும் என்ற நம்பிக்கையுமில்லை. என்று இப்போது மேற்கு நாடுகள் கூறத் தொடங்கி விட்டன.

ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையும் கூட சர்தேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளது.

இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு ஒருவருட கால அவகாசத்தை அளிக்கும் வகையிலும் சர்வதேச விசாரணைப் பொறிமுறை குறித்து தெளிவான எந்த வழிமுறையையும் வகுக்காமல் தீர்மான வரைபு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது தான் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்கான அழைப்பில் இருந்து ஏன் பின்வாங்கியது?

முதலில் இந்தக் கேள்விக்கு விடை காண வேண்டும். சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைப்பது தொடர்பாக அமெரிக்கா வெளிப்படையான எந்த வாக்குறுதியையும் வழங்கவில்லை என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

எவருக்கும் தனிப்பட்ட முறையில் அத்தகைய வாக்குறுதி வழங்கப்பட்டதாகவும் தகவல் இல்லை. கடைசி வரை உள்நாட்டுப் பொறிமுறைகளின் ஊடாக பொறுப்புக்கூறுவது குறித்தே அமெரிக்கா பேசி வந்தது.

கடந்த ஜனவரி மாதம் இலங்கை வந்திருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்புத் தூதுவர் ஸ்டீபன் ஜே ராப்பிடம் யாழ்ப்பாணத்தில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் சர்வதேச விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதில் பல சிக்கல்கள் உள்ளன என்று பதிலளித்திருந்தார்.

அவரது அந்தப் பதிலே அமெரிக்கா சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றுக்கு பரிந்துரைக்கும் தீர்மான வரைபை சமர்ப்பிக்கத் தயாராக இல்லை என்பதை ஓரளவுக்குச் சுட்டிக்காட்டியிருந்தது.

இப்போது அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகளும் உறுப்பு நாடுகளின் பரிசீலனைக்காக சமர்ப்பித்துள்ள தீர்மான வரைபு சுதந்திரமான விசாரணை தேவை என்ற கருத்தை ஆதரிக்கும் அதேவேளை, அதற்கான வழிமுறையை சுட்டிக்காட்டாத வகையில் அமைந்துள்ளது.

இலங்கை அரசாங்கம் நம்பகமான விசாரணையை நடத்தப் போவதில்லை என்பதை அமெரிக்கா ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தாலும் அமெரிக்காவினால் ஏன் வெளிப்படையாக சுதந்திரமான விசாரணைப் பொறிமுறை ஒன்றைக் கோரும் தீர்மான வரைபை முன்வைக்க முடியாமல் போயுள்ளது? இந்தக் கேள்வியும் இதற்குத் தேடக்கூடிய பதிலும் மிகமுக்கியமானவை.

தமிழர் தரப்பு முன்வைக்கும் கோரிக்கைகள் எல்லாவற்றையும் சர்வதேச சமூகம் தனது நிலைப்பாட்டாக எடுத்துக் கொள்ளும் என்று கருதுவதோ அவ்வாறு செய்ய வேண்டும் என்று நினைப்பதோ தவறானது.

ஆனால் தமிழர் தரப்பிலுள்ள பலரும் அத்தகைய உணர்ச்சி வச சூழலுக்குள் தான் சிக்கியுள்ளனர். அமெரிக்க தீர்மான வரைபைக் கவனித்தால் ஒன்றைத் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். தனியே அதில் போர்க்காலக் குற்றங்கள் அதன் மீதான விசாரணைகள் என்ற கோட்டுக்குள் மட்டும் அது நிற்கவில்லை.

அதற்கு அப்பால் போர்க்கால சம்பவங்கள் போருக்குப் பிந்திய சம்பவங்கள் இந்த இரண்டையும் இணைத்தே தீர்மான வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து போருக்குப் பிந்திய சூழலை அரசாங்கம் தன் கட்“டுக்குள்ட கொண்டு வந்திருந்தால் இப்போதைய நெருக்கடியை எதிர்கொண்டிருக்காது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அது சரியான முடிவாக இருந்தால் போர்க்கால மீறல்கள் குறித்து சர்வதேச சமூகம் அதிகம் கவலைப்படவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அதற்காக போர்க்கால மீறல்களை மறக்க வேண்டும் என்றோ, மறைக்க வேண்டும் என்றோ மேற்குலகம் நினைக்கிறது என்று கருத முடியாது. அந்த விவகாரம் கருத்தில் எடுக்கப்பட்டுள்ள அளவு தான் முக்கியமானது. போருக்குப் பிந்திய இலங்கை சரியான வழியில் செல்லவில்லை என்றவுடன் போர்க்கால மீறல்களை வைத்து மேற்குலகம் இலங்கையைத் திசைதிருப்ப முனைகிறது என்பதே சரியான கருத்து.

இது மேற்குலக நலன்களையும் பிரதிபலிக்கும் ஒரு நகர்வு என்றே எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் நலனைச் சார்ந்த நடவடிக்கைகளாக இதனைக் கருத முடியாது.

சந்தர்ப்பவசமாக இது தமிழருக்கும் கொஞ்சம் நீதி வழங்குவதற்கான மார்க்கங்களைத் திறந்து விட்டிருக்கிறது அவ்வளவு தான்.

மேற்குலகம் மேற்கொள்கின்ற இந்த சகர்வின் எல்லா அம்சங்களும் தமிழர் நலன் சார்ந்திருக்கும் என்று எதிர்பார்த்ததால் தான் சிலருக்கு இது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அதேவேளை மேற்குலகம் இலங்கைக்கு எதிராக சமர்ப்பித்த தீர்மான வரைபின் உறுதித்தன்மையை முடிவு செய்யும் சக்தி ஐநா மனித உரிமைகள் பேரவையின் ஏனைய உறுப்பு நாடுகளையும் சார்ந்த விடயம் என்பதை மறந்து விடக் கூடாது.

47 நாடுகளைக் கொண்ட ஐநா மனித உரிமைகள் பேரவையில் கடும் போக்கான தீர்மானத்தை ஆதரிக்க எத்தனை நாடுகள் முன்வரும் என்பதை கவனிக்க வேண்டும்.

வெறுமனே ஒரு தீர்மான வரைபுமனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்து விடுவது மட்டும் முக்கியமானது அல்ல. அந்த வரைபு நிறைவேற்றப்பட்டால் தான் அதற்கு ஒரு பெறுமானம் கிடைக்கும். அது நடைமுறைக்கு வரும்.

போர் முடிவுக்கு வந்து சுமார் ஒரு வாரம் கழித்து 2009 மே 27ம் திகதி அவசரமாக கூட்டப்பட்ட ஐநா மனித உரிமைகள் பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் ஒரு தீர்மான வரைபைக் கொண்டுவர இருந்தன. அதற்காகவே அந்தச் சிறப்புக் கூட்டமும் கூட்டப்பட்டது. போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தும் அந்த தீர்மான வரைபை சமர்ப்பித்த ஐரோப்பிய நாடுகள் அதற்குப் போதிய ஆதரவு கிடைக்காமல் போனதால் அதை விவாதத்துக்கு கூட விடக் கோரவில்லை.

ஆனால் கடைசியில் அது வினையாகவே முடிந்து போனது.

அரசாங்கத்தின் போர் வெற்றியைப் பாராட்டும் வகையிலும், அதற்கான ஆதரவை உறுதிப்படுத்தும் வகையிலும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சியால் அப்போது கொண்டு வரப்பட்ட தீர்மானம் 29 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. வெறும் 12 நாடுகள் மட்டுமே அப்போது அந்த தீர“்மானத்தை எதிர்த்து நின்றன.

இப்போது அந்தளவுக்கு மோசமான நிலை இல்லையென்றாலும், பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவுடன் கடுமையான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் திணறவே செய்கின்றன.

இலங்கை ஏற்படுத்திக் கொண்டுள்ள அரசியல் இராஜதந்திர நகர்வுகள்,மற்றும் பொருளாதார உறவுகளும் பல நாடுகள் தமது நலன்களை முன்னிறுத்தி இந்த விவகாரத்தைக் கையாளத் தொடங்கியுள்ளதும் கடுமையான தீர்மானத்தைக்கொண்டு வருவதற்குச் சவாலான சூழலைத் தோற்றுவித்துள்ளது.

கடுமையான தீர்மானத்தை மேற்குலகம் முன்வைப்பதற்கு இந்தியா, பிரேசில், தென்னாபிரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் சவாலாக உள்ளன. இந்த நாடுகளின் ஆதரவு இழக்கப்படுவதை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விரும்பவில்லை. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பார்த்தால் ஐநா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைபு முன்னரைவிட வலிமையானதாகவே தோன்றும்.

அதேவேளை கடுமையான தீர்மானத்தை முன்வைத்தால் அதைப் பயன்படுத்தி தமது அரசியல் பலத்தைப் பெருக்கிக் கொள்ளும் நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கும் சூழலையும் அமெரிக்கா கருத்தில் எடுத்திருக்கும்.

தற்போதைய அரசாங்கத்தின் மூலம் எதையும் செய்ய முடியாதென்ற நிலையில் ஆட்சி மாற்றம் ஒன்றை நிகழ்த்த அமெரிக்கா திடம்டமிட்டிருந்தால் அந்த திட்டத்துக்கு இது குழப்பத்தை ஏற்படுத்தும்.

எனவே அதனை மனதில் வைத்தும், அமெரிக்கா தீர்மான வரைபை நீர்த்துப் போகச் செய்திருக்கலாம். எவ்வாறாயினும் இது இறுதியான வரைபு அல்ல. இறுதி வரைபு எந்தளவுக்கு வலிமையானது என்பதை அறிந்து கொண்ட பின்னரே அது பாதிக்கப்பட்ட தமிழருக்கு எந்தளவுக்கு பயன்மிக்கதாக அமையும் என்பதை உறுதியாக கூறமுடியும்.

-ஹரிகரன்

TAGS: