சுவிஸ் வர சரியாக காசு கொடுக்கவில்லையா ? துருக்கியில் வைத்து சித்திரவதை செய்து அதனை டெலிபோனில் உறவினர்களை கேட்க்க வைக்கிறார்கள் என்றால் நீங்கள் நம்புவீர்களா …வாருங்கள் செய்திக்குச் செல்லலாம்…
சுவிட்சர்லாந்தில் அப்பிள் பழங்கள் மட்டுமல்ல பணமும் மரத்தில் காய்கிறது, விரும்பியவாறு பிடிங்கி கொள்ளலாம் என்ற ஒரு மாயை தோற்றத்தையே இலங்கையில் உள்ள பலரும் கற்பனை பண்ணிக்கொள்கின்றனர். இதனால் தான் 38 இலட்சம் ரூபா பணத்தை கொடுத்து பல இளைஞர்கள் முகவர்கள் கைகளில் சிக்கி தவித்து இறுதியாக இறந்தும் போகிறார்கள். நடந்த உண்மைச் சம்பவத்தை அதிர்வின் வாச்கார்களுக்காக தருகிறோம்…
சில முகவர்கள் 35 லட்சம் வரை வாங்கிக்கொண்டு, தமிழ் இளைஞர்களை துருக்கி வரை கொண்டு வருவதும். அங்கே இருந்து சுவிசுக்குள் வந்து காலடி வைத்தால் போதும். பிறகு ஒன்றுமே செய்ய முடியாது. அசேலம் கிடைக்கும் என்றும் பொய் கூறுகிறார்கள். சிலர் சுவிட்சர்லாந்திற்கு வரும் வழியிலேயே இறந்து போகின்றனர். அவ்வாறு ஒரு சம்பவம் அண்மையில் நடைபெற்றுள்ளது. சுவிட்சர்லாந்து செல்வதற்காக துருக்கிக்கு அழைத்து வரப்பட்ட முல்லைத்தீவை சேர்ந்த காண்டீபன் என்ற இளைஞர் துருக்கியில் உள்ள ஆட்கடத்தல் முகவர்களால் சித்திரவதை செய்யப்பட்டு மரணமாகியுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் அதிர்வுக்கு கிடைத்துள்ளது.
இலங்கையிலிருந்து ஆட்களை கடத்தி வரும் முகவர்கள் துருக்கியில் உள்ள முகவர்களிடம் ஒப்படைக்கின்றனர். அவர்கள் கடல்மார்க்கமாக அல்லது விமான மூலம் சுவிட்சர்லாந்திற்கு கடத்தி வருகின்றனர். காண்டீபனுடன் மேலும் 5 தமிழ் இளைஞர்கள் துருக்கியில் உள்ள முகவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர். இதற்கு முதல் அனுப்பிய ஒரு தொகுதியினரின் பணத்தை இலங்கை முகவர் துருக்கியில் உள்ள முகவருக்கு கொடுக்காததால் காண்டீபனுடன் சென்ற 5 தமிழ் இளைஞர்களையும் பிடித்து வைத்து சித்திரவதை செய்துள்ளனர். சித்திரவதை செய்யும் போது அலறும் சத்தத்தை தொலைபேசியில் ஊடக இலங்கை முகவருக்கு போட்டு காட்டி உரிய பணத்தை கொடுக்காவிட்டால் இந்த இளைஞர்களை கொலை செய்யப்போவதாக எச்சரித்துள்ளனர்.
வெளிநாடுகளுக்கு என முகவர்களால் கொண்டுவரப்படும் இளைஞர்களை இடைநடுவில் சித்திரவதை செய்வது வழமைதான் என பலரும் கூறுகின்றனர். பெண்கள் என்றால் முகவர்கள் அவர்களை தவறாக பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்தும் சம்பவங்களும் இடம்பெறுவது வழமை. முகவர்களால் அழைத்து வரப்படும் இளைஞர்களை ரஷ்யா, துருக்கி போன்ற நாடுகளில் வைத்து கொண்டு அவர்களை சித்திரவதை செய்வார்கள். பணத்தை தந்தால் தான் விடுவோம் இல்லையேல் அவர்களின் காதை கையை வெட்டி விடுவோம் என உறவினர்களுக்கு எச்சரிப்பார்கள். வேறு வழியின்றி தமது பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக வெஸ்ரேன் யூனியன் ஊடாக பணத்தை அனுப்பிய சம்பவங்களும் பல உண்டு.
இதேபோன்றுதான் காண்டீபன் என்ற இளைஞரையும் அவருடன் வந்த ஏனைய 5 இளைஞர்களையும் துருக்கியில் உள்ள முகவர்கள் சித்திரவதை செய்துள்ளனர். சிலரின் உடலை கீறி உப்பு மற்றும் மிளகாய் தூள்களை போட்டுள்ளனர். ஆணுறுப்பை வெட்டி உப்பு பெற்றோல் மிளகாய் தூள் போன்றவற்றை போட்டுள்ளனர். இந்த சித்திரவதைகளால் காண்டீபன் என்ற இளைஞர்கள் உயிரிழந்திருக்கிறார். ஏனையவர்கள் மயக்கமான நிலையில் சித்திரவதை செய்த முகவர்கள் கைவிட்டு சென்றுள்ளனர். அதன் பின்னர் துருக்கி பொலிஸார் அவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இவர்கள் விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளனர். இவர்கள் அனைவரும் தலா 38 இலட்சம் ரூபா பணத்தை முகவர்களுக்கு கொடுத்தே சுவிட்சர்லாந்து செல்கிறோம் என்ற கற்பனைகளுடன் வந்தார்கள்.
இதுவரை காலமும் சிங்களம் சித்திரவதை செய்தது. தற்போது துருக்கி மற்றும் ரஷ்யர்கள் செய்கிறார்கள். “உடையவன் இல்லாவிட்டால் உள்ளது மூன்று முளம்” என்பார்கள். தமிழர்களுக்கு என்று ஒரு தனி அரசு இருந்திருந்தால் , தட்டிக் கேட்க்க நாதி இருந்திருக்கும்… உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் ஒரு 2ம் தர பிரஜைகளாக நாதியற்று வாழ்கிறார்கள் தமிழர்கள்…
அதிர்வுக்காக,
கண்ணன்
-http://www.athirvu.com