‘ஒரே சீனம்’ கொள்கைக்கு ஆதரவு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பின்வாங்கலின் பின்னணி

trumpசீன அதிபர் ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘ஒரே சீனம்’ என்ற சீனக் கொள்கையைத் தான் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.
 சீனாவை கண்டபடி எதிர்த்து வந்த ட்ரம்ப் திடீரென இப்படி ‘சரண்’ அடைந்ததற்கான காரணங்களை அரசியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். தொலைபேசி உரையாடலில் ‘தைவான் சீனாவிலிருந்து தனிப்பட்டதல்ல’ என்ற கொள்கையை ‘மதிக்கிறோம்’ என்று ட்ரம்ப், ஜின்பிங்கிடம் தெரிவித்துள்ளது இன்று சீன ஊடகங்களில் வெற்றிப் பெருமிதங்களுடன் வலம் வந்து கொண்டிருக்கிறது.
 சரணாகதி குறித்து வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றில், “ஜின்பிங்கின் கோரிக்கைக்கு இணங்க அதிபர் ட்ரம்ப் ஒரே சீனம் என்ற கொள்கையை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார், மேலும் ட்ரம்ப் சீனாவுக்கும், ஜின்பிங் அமெரிக்காவுக்கும் வருகை தருவதை இரு தலைவர்களும் வரவேற்றுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது. சீன அயலுறவு அமைச்சக அறிக்கையில், “ஒரே சீனம் என்ற கொள்கைக்கு ட்ரம்ப்பின் ஆதரவையும் கடப்பாடையும் அதிபர் ஜின்பிங் பாராட்டினார்.
 அமெரிக்க-சீன உறவுகளின் அரசியல் அடித்தளம் ஒரே சீனம் என்ற கொள்கைதான்” என்று ட்ரம்ப் சரணாகதியை பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளது. சரண் பின்னணி: சிட்னி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அமெரிக்க-சீன உறவுகள் குறித்த நிபுணர் ஆஷ்லே டவுன்ஷெண்ட் கூறும்போது ட்ரம்ப் அமைச்சரவையில் உள்ள ரெக்ஸ் டில்லர்சன் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் ஆகியோர் சீனாவுடன் உறவுகள் பிரச்சினையானால் விளைவுகள் பற்றி விவரித்திருக்க வாய்ப்பிருக்கிறது. எவ்வளவு வேகமாக சீனாவை அவர் எதிர்க்கத் தொடங்கினாரோ,
 அத்தனை வேகமாக அவர் சரணடைந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடியதே. மேலும் இது உடன்பாடான மாற்றமாக இருக்காது, அமெரிக்க மனோநிலையில் அடிநாதமாக இருக்கும் பயன்கருதிய, பயனீட்டுக் கொள்கையினால் இருக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார். இத்தகைய சரண் நடைபெறவில்லையெனில் இருதரப்பினரும் எப்படி பேச்சை தொடங்குவது என்பதிலேயே சிக்கல் ஏற்பட்டிருக்கும் உறவுகளுக்கு இருந்த தடையை இந்த ஆதரவு அகற்றியிருக்கலாம், ஆனால் இருதரப்பு உறவுகள் அர்த்தமுள்ள வகையில் முன்னேற்றமடையும் என்றால் சந்தேகமே என்று கூறுகிறார் ஆஷ்லே டவுன்ஷெண்ட். சிவில் யுத்தம் முடிந்த பிறகு 1949-ல் தைவான் தனியாக ஆட்சி அமைத்தது. ஆனால் தைவானின் சுயாட்சியை பெய்ஜிங் ஒத்துக் கொள்ளவில்லை.
 தைவானை பிரச்சினைக்குரிய பிரதேசமாகவே சீனா கருதுகிறது, தேவைப்பட்டால் ஒருநாள் பலவந்தமாக சீனாவுடன் அதனை மீண்டும் இணைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தைபேயுடன் அமெரிக்கா தனது உறவுகளை 1979-லேயே முறித்துக் கொண்டாலும் தைவானுக்கு அமெரிக்காதான் ஆயுதங்களை பெருமளவில் வழங்கி வருகிறது. சீனாவின் ஃபுதான் பல்கலைக் கழகத்தின் அமெரிக்க ஆய்வுகல் துறை இயக்குநர் வூ சின்போ கூறும்போது, “ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக ஒரே சீனம் கொள்கையை எதிர்த்து ட்ரம்ப் செய்த ட்வீட்களெல்லாம் அவரது சொந்தக் கருத்துகளே.
 ஆனால் இப்போது அவர் அமெரிக்க அதிபர் எனவே அரசின் பார்வையை அவர் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும். எனவே அவர் ஏற்கெனவே இருக்கும் நிலவரங்களை தொடர்ந்தேயாக வேண்டும்” என்றார். ட்ரம்பின் இந்த அந்தர்பல்டியை வர்ணிக்கும் சீன சமூகவலைத்தளம், “ட்ரம்ப் கடைசியில் வெளிச்சத்தைக் கண்டுள்ளார். சீனாவுடன் நல்லுறவு பேணுவதால் என்ன கெட்டு விடப்போகிறது?’ என்று பயனாளர் ஒருவர் உற்சாகத்துடன் நிலைத்தகவல் பதிவிட்டுள்ளார். மொத்தத்தில் அதிபர் ட்ரம்பின் இந்த பின்வாங்கல் சீனா தரப்பில் தனக்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

-http://www.athirvu.com