ஜோகூர் டிஏபி-இலிருந்தும் சிலாங்கூர் டிஏபி- இலிருந்தும் கட்சித் தலைவர்கள் வெளியேறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அது குறித்து அவற்றின் தலைவர்கள் எதுவும் அறிந்திருக்கவில்லை.
நேற்று, முன்னாள் டிஏபி உதவித் தலைவர் துங்கு அப்துல் அசிஸ் துங்கு இப்ராகிம் 48மணி நேரத்தில் ஜோகூரிலும் சிலாங்கூரிலும் இரண்டு மூத்த டிஏபி தலைவர்கள் கட்சியிலிருந்து விலகுவார்கள் என்று கூறியிருந்தார்.
இது குறித்து சிலாங்கூர் டிஏபி தலைவர் டோனி புவாவைத் தொடர்பு கொண்டு வினவியதற்கு அது பற்றி அவர் அறிந்திருக்கவில்லை.
“ஒரு வேளை துங்கு அப்துல் அசிசுக்கு அதிகம் தெரிந்திருக்கலாம்”, என்றாரவர்.
ஜோகூர் டிஏபி தலைவர் லியு சின் தோங்கும் அதே போன்றுதான் தெரிவித்தார்.
“நான் எதுவும் கேள்விப்படவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்”, என்றார்.
மலாக்காவில் டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் சட்டமன்ற உறுப்பினர் மூவரும் கட்சியிலிருந்து விலகியதை அடுத்து துங்கு அப்துல் அசிஸ் மேலும் பலர் அதிலிருந்து வெளியேறுவார்கள் என்று கூறியிருந்தார்.