இந்தோனேசியாவின் பாலியில் விடுமுறை கழிக்கச் சென்ற பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் “41 சிறப்பு அறைகளை (presidential suites) வாடகைக்கு எடுத்திருப்பதாக பொய்யான செய்தி பரப்புவோரை அம்னோ -ஆதரவு இணையத்தளம் ஒன்று சாடியுள்ளது.
பக்கத்தான் ஹராபான் மற்றும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் ஆதரவாளர்கள் இப்படி அவதூறு பரப்பி வருவதாக -MyKMU.net கூறியது.
“ஒரு தங்குவிடுதி 41 சிறப்பு அறைகளைக் கொண்டிருப்பதாகக் கூறுவதை யாரும் நம்ப மாட்டார்கள்”, என்று அது கூறிற்று.
நஜிப் ஒரு முன்னாள் பிரதமரின் புதல்வர்.
“முன்னாள் (மலேசிய) பிரதமர்களின் மகன்கள் யாரும் வறுமையில் வாடவில்லை. மகாதிரின் பிள்ளைகளைப் பாருங்கள். கோடீஸ்வரர்கள்.
“எனவே, (நஜிப்) ஆடம்பர இடத்தில் விடுமுறையைக் கழிக்க விரும்பினால்கூட அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. அவரிடம் அதற்கான வசதி உள்ளது. அதற்காக பொதுப் பணத்தைச் செலவிட வேண்டிய அவசியமில்லை”, என்று அது குறிப்பிட்டது.
நஜிப் ஜூன் 26-இலிருந்து பாலியில் இருப்பதாகவும் அவர் செயிண்ட் ரெஜிஸ் ஹோட்டல் நூசா டூவாவில் தங்கியிருப்பதாகவும் இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவருடன் 23 பேர் சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மலேசிய பிரதமர் ஒரு சிறப்பு அறையையும் 11 சாதாரண அறைகளையும் வாடகைக்கு எடுத்திருப்பதாக இந்தோனேசிய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி மெட்ரோநியுஸ் கூறியது.
சமூக வலைத்தளங்களில் வலம்வரும் செய்தி ஒன்று நஜிப் 41 சிறப்பு அறைகளை வாடகைக்கு எடுத்திருப்பதாகக் கூறிற்று. ஒரு அறைக்கு மட்டும் வாடகை ரிம35,163. இது ஒரு நாளைக்கு. அப்படியானால் 41 அறைகளுக்கு ஐந்து நாள்களுக்கு மொத்தம் ரிம7.2 மில்லியனாகும்.
சமுக வலைத்தளங்களில் வலம்வரும் செய்திகளை அப்படியே நம்பி விட வேண்டாம் என்று அரசாங்கம் கூறி வருகிறது.
எதிர்க்கட்சியினரோ, தங்களைப் பற்றி அரசு- ஆதரவாளர்கள் பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.
பொய்யான செய்திகளை மறுக்கவும் மக்களுக்கு உண்மையான செய்திகள் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் மார்ச் மாதம் SEBENARNYA.MY என்ற இணையத்தளத்தைத் தொடங்கியது.
பாம்பின் கால் பாம்பறியும். அல்தான்துயா நஜிப், முன்னாள் பிரதமரின் மகனாம், அதனால் அவரிடம், நிறைய பணம் இருக்கிறதாம். மகாதிமிரின் மகன்கள் அனைவரும் கோடீஸ்வரர்களாம். திருட்டுக்கு பேர் போன அலிபாபாக்கள் தான் நம் நாட்டில் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள், என நிரூபணமாகியுள்ளது.